

தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாத குழுவினர் மேலும் இரண்டு கார்கள் வாங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெடித்த ஹூண்டாய் ஐ20 காரின் உரிமையாளர் முகமது சல்மான் என்பவரை திங்கள்கிழமை இரவே காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்னதாகவே ஃபரிதாபாத்தைச் சேர்ந்த கார் விற்பனையாளருக்கு அந்த காரை விற்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணையில், சில மாதங்களுக்குள் 7 முறை அந்த கார் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியாக ஃபரிதாபாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் ஆமிர், அவரைத் தொடர்ந்து தாரிக் அந்த காரை வாங்கியுள்ளனர். இறுதியாக முகமது உமர் வாங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.
தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தபோது, அந்த காரை முகமது உமர் ஓட்டியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று விசாரணை அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், வெடித்த காரில் இருந்து உடல் பகுதிகள் மற்றும் கைரேகைகளைக் கைப்பற்றி டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, காரை இயக்கியது உமர் தானா? என்பதை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆமீர், தாரிக் மாலிக், கார் விற்பனையாளர் நதீம் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஃபரிதாபாத்தில் வாங்கிய காரைத் தவிர, மேலும் இரண்டு கார்களை தில்லியில் அவர்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு கார்களையும் தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.