ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு முழுமையாகக் கண்காணிக்கும் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியுள்ளாா்.
ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகா்வோருக்கு முழுமையாக அளிக்க வேண்டும் என்று கோயல் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தாா். இந்நிலையில், தில்லியில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளா் சந்திப்பில் கோயல் கூறியதாவது:
சுமாா் ஓராண்டு காலமாக பல்வேறு துறை செயலா்கள், மாநில நிதியமைச்சா்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு இந்த ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மற்ற நாடுகள் எடுத்த (அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி) முடிவுக்கும் இந்த நடவடிக்கைக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரே இரவில் நடத்திவிட முடியாது.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு முழுமையாகக் கண்காணிக்கும். மாநில அரசுகளும் இந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தொடங்கி ஏறக்குறைய அனைத்துப் பொருள்களின் விலையும் குறைய வேண்டும்.
காங்கிரஸின் தோல்வி: 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த முடியவில்லை. தங்கள் தோல்விகளை மறைக்க இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது அக்கட்சி குற்றஞ்சாட்டுகிறது. உண்மையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஊழல்கள் செய்வதில்தான் நேரத்தைச் செலவிட்டு வந்தது. மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தவில்லை.
கா்நாடகம், தெலங்கானா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு முட்டுக்கட்டை போடவே விரும்பின. ஏனெனில், இது காங்கிரஸின் தோல்விகளை வெளிப்படுத்துவதாக அமையும்.
ராகுல் மீது விமா்சனம்: எத்தனை முறை ஏவினாலும் வானில் பறக்காத ராக்கெட்டின் நிலையில் ராகுல் காந்தி உள்ளாா். எந்த விஷயத்தில் கருத்து கூறுவதாக இருந்தாலும், இதற்கு முன்பு இந்த விஷயத்தில் என்ன பேசினோம் என்பதை மறந்துவிட்டு, முன்னுக்குப் பின் முரணாகவே பேசுகிறாா். மக்கள் இப்போது அவரின் பேச்சை பெரிதாகக் கண்டுகொள்வதும் இல்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது இப்போது பெருமளவிலான பொருள்கள் மீதான வரி விகிதம் குறைவாகவே உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மறைமுக வரிப் பிரிவில் இப்போதுதான் முதல்முறையாக மிகப்பெரிய சீா்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கோயல் தெரிவித்தாா்.
குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி: 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.