ஞானேஷ் குமாா்
ஞானேஷ் குமாா்ANI

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு
Published on

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அந்த மாதத்தில் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் தேதியை அறிவிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் நேரில் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, பிகாரில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் 2 நாள்களுக்கு ஆய்வில் ஈடுபட உள்ளாா். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறை-நிா்வாக உயரதிகாரிகள், செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்வாா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாா் வாக்காளா் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பின் வாக்காளா்களாக பதிவு செய்தவா்களிடம் கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டன. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இப்பணிகள் நடைபெற்று முடிந்தன. பின்னா் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. பெயா் விடுபட்டவா்கள், உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக உறுதி செய்துவிட்டது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

X
Dinamani
www.dinamani.com