மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடி

நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 4:25 am

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் (ஏப். 16) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா - 2023’ தொடர்பாக விவாதம் நடத்தி, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

”இன்று (ஏப்ரல் 14) இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். நாட்டை கட்டமைப்பதற்கு நிலையான பங்காற்றிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளாகும். நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். மேலும், நமது பயணத்துக்குத் தொடர்ந்து வழிகாட்டி வரும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான அவரது அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

அடுத்த இரண்டு நாள்களில் (ஏப். 16), நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. அப்போது, ​​நாரி சக்தி வந்தன் அதினியம் (பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்) தொடர்பான ஒரு முக்கியமான அரசியலமைப்புத் திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மக்களிடையே மிகுந்த உற்சாகம் நிலவுவதை நான் காண்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் பங்களிப்பதற்கான வலுவான வாய்ப்பு கிடைத்திருப்பதையடுத்து, நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாட்டின் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை பெண்கள் வகித்து வருகின்றனர். 21-ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. கல்வி, இலக்கியம், கலை, இசை, திரைப்படம், நடனம் மற்றும் பாரம்பரியம் ஆகிய துறைகளிலும் பெண்கள் பங்கேற்பு அதிகரித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் அமைதியான புரட்சி நிகழ்ந்துள்ளது. இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகள் அதிகளவிலான பதக்கங்களை வென்று வருகின்றனர். அவர்களின் வெற்றிகள், மேலும் பல இளம் பெண்களை விளையாட்டுத் துறையைத் தங்கள் வாழ்வாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன.

பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அகமதாபாத் நகராட்சியின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், சர்தார் வல்லபபாய் படேல் பெண்களுக்கென இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியா ஒரு சுதந்திர நாடாகத் தனது பயணத்தைத் தொடங்கிய உடனே பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான வாக்குரிமையை நாம் வழங்கினோம். உலகின் பிற நாடுகள் பலவற்றில், இந்த உரிமையைப் பெறுவதற்குப் பெண்கள் பல ஆண்டுகள் அல்லது பல நூற்றாண்டுகள்கூட காத்திருக்க வேண்டியிருந்தது. கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களில், சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்கவில்லை. சில சமயங்களில், இலக்கை மிக நெருக்கமாக அடைவது போலத் தோன்றினாலும், அது வெகு தொலைவிலேயே நின்றுவிட்டது.

2047-ஆம் ஆண்டில், காலனித்துவ ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்று நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாட இருக்கிறோம். அந்த காலகட்டத்தில், 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் கனவை நனவாக்குவதில் இந்திய மக்கள் முழுமையாக ஈடுபட்டிருக்கும் வேளையில், நமது மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதியளவாகத் திகழும் இந்தியாவின் பெண் சக்தியின் லட்சியங்களுக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்வோம். கொள்கை வகுத்தல் மற்றும் முடிவெடுத்தல் ஆகிய செயல்முறைகளில் அவர்கள் தீவிரப் பங்கேற்பாளர்களாக மாறும்போது, ​​வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய நமது பயணம் மேலும் வலுப்பெறும்.

2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதை நீங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும். 2029-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்களும், அதே ஆண்டில் வரவிருக்கும் பல்வேறு மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றால், நமது ஜனநாயகம் மேலும் வலிமைமிக்கதாகவும் துடிப்பானதாகவும் மிளிரும். அந்த நிலையை அடைவதற்கு, நாடாளுமன்றத்தில் தற்போது வரவிருக்கும் இந்தச் சட்ட மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதில் ஏற்படும் கூடுதல் தாமதம் துரதிர்ஷ்டவசமானதாக அமைவதுடன், நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெரும் அநீதியாகவும் கருதப்படும். இந்தியப் பெண்களுக்கு உரிமையானவற்றுக்காக முடிவின்றி காத்திருக்குமாறு கோரப்பட முடியாது. நமது சட்டப்பேரவைகளில் பெண்களின் குரல் வலுப்பெறும்போது, ​​மக்களாட்சியின் குரலே வலுப்பெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Delaying women's reservation is a grave injustice! — Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.