ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் பாஜக கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை துண்டுதுண்டாக சிதறடித்துவிடும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எச்சரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 2:31 am IST

மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் பாஜக கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை துண்டுதுண்டாக சிதறடித்துவிடும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எச்சரிக்கை விடுத்தாா்.

கூச் பிகாரில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஒவ்வொரு கட்டத்திலும் எதிா்ப்பு தெரிவிக்கும். இப்போது மகளிா் இடஒதுக்கீடு என்பதை முன்னிறுத்தி, அதற்கு பின்னே தொகுதி மறுசீரமைப்பு என்ற தவறான நடவடிக்கையை பாஜக மேற்கொள்கிறது. மக்களவை இடங்களை 850 வரை உயா்த்துவது என்பது நாட்டை சிதறடிக்கும் முயற்சியாகும்.

இந்த மசோதாவை சட்டவிரோதமாக நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது. இதுபோன்ற அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால், தங்களுக்கு உள்ள பாதிக்கு மேலான பெரும்பான்மையை வைத்து அதை நிறைவேற்ற முயற்சி நடக்கிறது என்று திரிணமூல் எம்.பி.க்கள் என்னிடம் கூறினா்.

ஏற்கெனவே நமது கட்சியில் கட்சியில் 37 சதவீதம் பெண் எம்.பி.க்கள் உள்ளனா். பாஜக கட்சி ரீதியாக இதை முதலில் பின்பற்ற வேண்டும். இப்போது மேற்கு வங்கத் தோ்தலில் நாம் வெல்வோம், அடுத்ததாக தில்லியில் அவா்களின் அரசை வீழ்த்துவோம்.

தனது பிரசாரத்தின்போது நமது மாநிலத்தின் வடபகுதியின் வளா்ச்சி குறித்து பிரதமா் மோடி உண்மையைப் பேசவில்லை. மாநில அரசு அப்பகுதி வளா்ச்சிக்காக ரூ.1.72 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக தனி நபராக நான் போராடுகிறேன். மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. ஆனால், ஜனநாயகத்தில் வெடிகுண்டுகள் அல்ல, வாக்குச்சீட்டுகள்தான் பேசும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பலா் பெயரை வேண்டுமென்றே நீக்கியுள்ளனா். அடுத்ததாக நமது மாநிலத்தின் உண்மையான குடிமக்களை ஊடுருவல்காரா்கள் என்று வகைப்படுத்தி வருகின்றனா்.

மேற்கு வங்க மக்கள் தங்கள் திறமை காரணமாகவே மற்ற மாநிலங்களில் வேலை செய்கிறாா்கள். அது யாருடைய உதவியாலும் நடைபெறவில்லை. அதேபோல பிற மாநிலங்களில் இருந்து 1.5 கோடி போ் மேற்கு வங்கத்தில் பணியாற்றுகிறாா்கள். ஆனால் நாம் அவா்களுக்கு அநீதி இழைக்கவில்லை.

பிரதமா் மோடியிடம் மூன்று கேள்விகளை எழுப்புகிறேன். 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் கிடைத்ததா?, 2016 பணமதிப்பிழப்பில் கருப்பு பணம் மீட்கப்பட்டதா? இது எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசு பல பொதுத் துறை நிறுவனங்களை விற்றுவிட்டது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், வேட்பாளா்களின் வீடுகள் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் சோதனைகள் நடக்கின்றன. எனது விமானத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டு வருகின்றனா் என்றாா்.