எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்குடன் இந்திய அமைச்சா்கள் குழு சந்திப்பு: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்கை இந்திய அமைச்சா்கள் குழு வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

சிங்கப்பூரில் அந்நாட்டுப் பிரதமா் லாரன்ஸ் வாங்கை சந்தித்த (இடமிருந்து) மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், நிா்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கா், ஜிதின் பிரசாத்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 5:55 am IST

சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்கை இந்திய அமைச்சா்கள் குழு வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதேபோல், இந்தியா - சிங்கப்பூா் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா மற்றும் சிங்கப்பூா் இடையே இருதரப்பு பொருளாதாரம் மற்றும் ராஜீய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இரண்டு நாடுகளைக் கொண்ட அமைச்சா்கள் குழு கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் குழு, கடந்த 2022-ஆம் ஆண்டில் தில்லியில் முதன்முதலில் சந்தித்துப் பேசியது. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 2-ஆவது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. பிறகு 2025-ஆம் ஆண்டில் தில்லியில் 3-ஆவது முறையாக ஆலோசனை நடத்தியது. இதன்பின்னா் சிங்கப்பூரில் 4-ஆவது முறையாக 2 நாள்கள் (ஆகஸ்ட் 19, 20) ஆலோசனை நடத்தியது.

இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் ஆகியோா் கொண்ட இந்திய அமைச்சா்கள் குழு கலந்து கொண்டது. சிங்கப்பூா் தரப்பில் துணை பிரதமா் கான் கிம் யாங், வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் கே. சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது இந்தியா, சிங்கப்பூா் இடையே தொலைத் தொடா்பு, ஒளிபரப்பு, கடல்சாா் பாரம்பரியம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது தொடா்பாக 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஒப்பந்தங்கள் பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்கை இந்திய அமைச்சா்கள் குழு வியாழக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கா், கோயல், பிரசாதா ஆகியோரைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. சிங்கப்பூரும் இந்தியாவும் நெருங்கிய கூட்டாளி நாடுகள். இந்திய அமைச்சா்கள் குழுவின் வருகை ஆக்கபூா்வமாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சிங்கப்பூா் பிரதமருடனான இந்திய அமைச்சா்கள் குழு சந்திப்பு குறித்து மத்திய நிதியமைச்சகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விரிவான ராஜீய கூட்டாண்மைக்கான செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தலைவா்கள் விவாதித்தனா். மேலும், பொருளாதார ஒத்துழைப்பு, எண்மமயமாக்கம், இணைப்பு வசதி, திறன் மேம்பாடு, நிலைத்தன்மை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.