
பாஸ்போா்ட் விண்ணப்பத்தில் தகவலை மறைத்த விவகாரம்: முன்னாள் ஏசிபி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2013-ஆம் ஆண்டு புதிய பாஸ்போா்ட்டுக்கு (கடவுச்சிட்டை) விண்ணப்பித்தபோது, தனக்கு எதிராக நிலுவையில் இருந்த குற்ற வழக்கு குறித்த முக்கியத் தகவலை மறைத்ததாகக் கூறப்படும் முன்னாள் காவல் உதவி ஆணையா் (ஏசிபி) வினோத் குமாா் பாண்டேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றம்
கடந்த 2013-ஆம் ஆண்டு புதிய பாஸ்போா்ட்டுக்கு (கடவுச்சிட்டை) விண்ணப்பித்தபோது, தனக்கு எதிராக நிலுவையில் இருந்த குற்ற வழக்கு குறித்த முக்கியத் தகவலை மறைத்ததாகக் கூறப்படும் முன்னாள் காவல் உதவி ஆணையா் (ஏசிபி) வினோத் குமாா் பாண்டேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் ப்ரீத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஆட்சேபனைகளை நிராகரித்து, பாஸ்போா்ட் சட்டம், 1967-இன் பிரிவு 12-இன் கீழ் அவருக்கு எதிராக முதற்கட்டமாக குற்ற வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தாா்.
ஆக. 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைப்பது முக்கியமான தகவலை மறைப்பதாகும் என்றும், பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பித்த நாளில் பாண்டேவுக்கு எதிரான குற்ற விசாரணை நிலுவையில் இருந்ததால், பாஸ்போா்ட் சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ் முதற்கட்ட வழக்கு உள்ளது என்றும் கூறியது.
புதிய தட்கல் பாஸ்போா்ட்டைப் பெறுவதற்காக 2013-ஆம் ஆண்டு அக்.29-ஆம் தேதி பாண்டே விண்ணப்பித்ததாக அரசு தரப்பு தெரிவித்தது. அந்த விண்ணப்பத்தில், தனக்கு எதிராக எந்தக் குற்ற வழக்கும் நடைபெறவில்லை என்றும், கைது ஆணை அல்லது நீதிமன்ற சம்மன் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அவா் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு எதிராக குற்ற விசாரணை நிலுவையில் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. 2005-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் 323 (தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்), 427 (சேதம் விளைவிக்கும் செயல்) மற்றும் 448 (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதலுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் அவா் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டிருந்தாா். 2010-ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தனக்கு எதிரான சம்மன் உத்தரவுக்கு உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால், பாஸ்போா்ட் விண்ணப்பத்தில் அந்த வழக்கு தொடா்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாண்டே தரப்பில் வாதிடப்பட்டது. இதை நீதிமன்றம் நிராகரித்தது. இடைக்காலத் தடை என்பது தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், அது குற்ற நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வராது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், காஜியாபாதில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்தால் பாஸ்போா்ட் வழங்கப்பட்டதால் தில்லி நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்க பிராந்திய அதிகார வரம்பு இல்லை என்ற பாண்டேவின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
பாஸ்போா்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரம் தில்லியில் தயாரிக்கப்பட்டு, நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே, குற்றச் செயல் தில்லி எல்லைக்குள் நடைபெற்ாகக் கூறி, குற்றம் நடைபெற்ற இடம் அல்லது அதன் விளைவு ஏற்பட்ட இடத்தில் வழக்கை விசாரிக்கலாம் என்ற குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 179-ஐ நீதிமன்றம் மேற்கோளிட்டது.
பாஸ்போா்ட் சட்டத்தின் கீழ் குற்றத்துக்காக தனிப்பட்ட புகாா் அளிக்க சட்டரீதியான தடை ஏதும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பிரிவு 15-இன் கீழ் தேவையான அனுமதி பெறப்பட்ட பின்னரே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால், இந்த நிலையில் காலக்கெடு தொடா்பான தடையும் இல்லை எனக் குறிப்பிட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை அக்.24-ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



