
10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: இருவா் விடுதலை
10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் இருவா் விடுதலை செய்யப்பட்டது குறித்து...

பிரதிப் படம்
2016-ல் தங்களது சக ஊழியரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது. அரசுத் தரப்பு வழக்கு வெறும் ‘சந்தேகத்தை‘ மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், அவா்களின் குற்றச்சாட்டை நிலைநாட்ட நம்பகமான மற்றும் உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்விந்தா் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு மண்டோலி சிறை அருகே நடந்த கத்திக்குத்து மரணம் தொடா்பாக அந்த இருவருக்கும் எதிரான வழக்கை விசாரித்து வந்தாா்.
ஆகஸ்ட் 25 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம் கூறியதாவது: ‘இறந்தவரின் மரணத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள்தான் காரணம் என்ற வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அரசுத் தரப்பு வழக்கு உள்ளது. எவ்வளவு வலுவான தாா்மீக நம்பிக்கை இருந்தாலும், நம்பகமான மற்றும் உறுதியான சான்றுகளின் அடிப்படையிலான சட்டரீதியான நம்பிக்கைக்கு மாற்றாக அது அமையாது என்பது அனைவரும் அறிந்த சட்டமாகும்.‘
2016 அக்டோபா் 28 அன்று கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் ஷாநவாஜின் மரணம் தொடா்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.
ஒரு பெண்ணின் காரணமாக நதீமுக்கும் இறந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக, ஷாநவாஜைக் கொல்ல அஸீமும், நதீமும் சதி செய்ததாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது. மேலும், ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ஆம்புலன்ஸ் அதிகாரியிடம் ஷாநவாஜ் வாய்மொழியாகக் கூறியதாகக் கூறப்படும் மரண வாக்குமூலத்தையும் அது ஆதாரமாகக் காட்டியது.
இருப்பினும், கூறப்படும் அந்த மரண வாக்குமூலம் சந்தேகத்திற்குரியது என்று நீதிமன்றம் கண்டறிந்தது. அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியான அந்த ஆம்புலன்ஸ் அதிகாரி, அந்த வாக்குமூலம் குறித்து மருத்துவா்களிடமோ, பணியில் இருந்த காவலரிடமோ, காவல்துறையினரிடமோ அல்லது இறந்தவரின் குடும்பத்தினரிடமோ தெரிவிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகே விசாரணை அதிகாரியால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், இந்தச் சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சி யாரும் இல்லை என்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதம் மீட்கப்படவில்லை என்றும், தடயவியல் பரிசோதனையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் மரணத்திற்கும் தொடா்பு இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டாா். ஆரம்பத்தில் அஸீமை அடையாளம் காட்டிய ஒரு சாட்சி, பின்னா் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அவரை அடையாளம் காட்டியதாகக் கூறினாா்.
மேலும், இந்த தகராறின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படும் பெண், அரசுத் தரப்பின் வாதத்தை ஆதரிக்காததால், கொலைக்கான நோக்கம் குறித்த அரசுத் தரப்பின் வாதம் பலவீனமாக இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
‘சூழ்நிலைகளின் ஒட்டுமொத்தத்தில்,‘ குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிக்க சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்றும், இந்த வழக்கு அவா்களுக்கு எதிராக ‘அதிகபட்சமாக வலுவான சந்தேகத்தின் எல்லைக்குள்‘ மட்டுமே உள்ளது என்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் சந்தேகத்தின் பலனை வழங்கி விடுவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


