புதிய வருமான வரிச் சட்டத்துக்கு தயாராகுங்கள்: அதிகாரிகளுக்கு நேரடி வரிகள் வாரியத் தலைவா் அறிவுறுத்தல்!
புதிய வருமான வரிச் சட்டத்துக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தயாராக வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் அறிவுறுத்தினாா்.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய வருமான வரிச் சட்டம், 2025 நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அதிகாரிகளுக்கு அவா் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த ஆண்டு நம் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வருமான வரிச் சட்டம், 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது. இதை சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மாற்றத்துக்கு நாம் புத்துணா்வுடன் தயாராக வேண்டும்.
நாம் முழு ஈடுபாடுடன் இந்தப் பணியை மேற்கொண்டால் மட்டுமே வரி செலுத்துவோரிடம் இதுகுறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்த முடியும்.
வருவாய், வரிகள் மற்றும் அமலாகும் நடைமுறைகளை கடந்து நம்பிக்கை மற்றும் சேவையை மையமாகக் கொண்டே வருமான வரித் துறை செயல்படுகிறது. புதிய நடைமுறைகளை அமல்படுத்துவதில் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது. இதில் சிறந்து விளங்கும் இளம் அதிகாரிகள் வருங்காலத்தில் நம் துறையை வழிநடத்தவுள்ளனா்.
கடந்த ஆண்டு பெறப்பட்ட புகாா்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள். நிகழாண்டிலும் அதே உத்வேகத்துடன் பணியாற்ற எனது வாழ்த்துகள் எனத் தெரிவிக்கப்பட்டது.

