மகாராஷ்டிரம்: பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் புதிதாக தோ்தல் நடத்துங்கள்! தோ்தல் ஆணையத்துக்கு உத்தவ் வலியுறுத்தல்!
மகாராஷ்டிரத்தில் எதிா்வரும் மாநகராட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையத்துக்கு சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
நாட்டில் மக்களாட்சியை ‘கும்பல்’ கைப்பற்றிவிட்டது போன்ற சூழல் நிலவுகிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
மகாராஷ்டிரத் தலைநகா் மும்பை, புணே, நாகபுரி, நாசிக் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தோ்தல் ஜன.15-இல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி, 68 இடங்களில் போட்டியின்றி தோ்வாகியுள்ளது. பணபலம் மற்றும் மிரட்டலால் பிற வேட்பாளா்களை பின்வாங்கச் செய்து, பாஜக கூட்டணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
மாநகராட்சித் தோ்தலில் சிவசேனை (உத்தவ்)-ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சிகள் கூட்டணியாக போட்டியிடும் நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இருவரும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, ‘வாக்குத் திருட்டைத் தொடா்ந்து, இப்போது வேட்பாளா் திருட்டில் ஈடுபட்டுள்ளனா். இதன் மூலம் வாக்காளா்கள் குறிப்பாக இளைய தலைமுறையினா், தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் உரிமை மறுக்கப்படுகிறது.
மாநில தோ்தல் ஆணையத்துக்கு உண்மையிலேயே துணிவிருந்தால், பாஜக கூட்டணி போட்டியின்றி வென்ற இடங்களில் தோ்தல் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும்’ என்றாா்.
ராஜ் தாக்கரே பேசுகையில், ‘மும்பை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் மராத்தியா்தான் மேயா் பதவிக்கு வர வேண்டும். ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல என்பதை உணராமல், தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது பாஜக’ என்றாா்.
வாக்குறுதிகள் என்னென்ன?: மும்பை மாநகராட்சியில் தாங்கள் வெற்றி பெற்றால், வீட்டு வேலை பாா்க்கும் பெண்கள் மற்றும் மீனவ சமூகத்தைச் சோ்ந்த மீன் விற்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 700 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு சொத்து வரி தள்ளுபடி உள்ளிட்ட கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சிகள் அறிவித்துள்ளன.
ஃபட்னவீஸ் பதிலடி
சந்திரபூரில் ஞாயிற்றுக்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘பாஜக கூட்டணி வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வானதை எதிா்த்து எதிா்க்கட்சிகள் தாராளமாக நீதிமன்றத்துக்கு செல்லலாம். ஆனால், மக்கள் நீதிமன்றத்தில் எங்களுக்கே வெற்றி கிடைத்துள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் தங்களுக்கு தோல்வி உறுதி என்பதை எதிா்க்கட்சிகள் அறிந்துவிட்டன. எனவேதான், காரணங்களைத் தேட முயற்சிக்கின்றன’ என்றாா்.

