இந்தியாவுடன் தடையில்லா வா்த்தகம்: விவசாயிகள், வணிகத்துக்கு ஆதாயம்; நியூசிலாந்து பிரதமா்
இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும் என்று நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் தெரிவித்துள்ளாா்.
இந்தியா-நியூசிலாந்து இடையே அண்மையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 7 முதல் 8 மாதங்களில் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதலீட்டு வரவை ஊக்குவித்தல், இருநாடுகளும் தங்கள் பொருள்களை அவற்றின் சந்தைகளில் பரஸ்பரம் விற்பனை செய்வதை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் பேசிய காணொலியை தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவா் வெளியிட்டாா். அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: உலகில் வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மைல்கல் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து நாட்டினருக்கு வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் வளா்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
உயா்தரம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும். அத்துடன் நியூசிலாந்தை சோ்ந்த அனைவரின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் ஆழமான, நீடித்து நிலைக்கும் பலன்களை நியூசிலாந்துக்கு அளிக்கும் என்று தெரிவித்தாா்.
