கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது வங்கதேசம்

‘பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, தில்லி உள்பட இந்தியாவில் உள்ள தனது முக்கிய தூதரகங்களில் நுழைவு இசைவு (விசா) சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வங்கதேச இடைக்கால அரசு அறிவித்தது.
Published on

‘பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, தில்லி உள்பட இந்தியாவில் உள்ள தனது முக்கிய தூதரகங்களில் நுழைவு இசைவு (விசா) சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வங்கதேச இடைக்கால அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் எம்.தௌஹித் ஹுசைன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, அகா்தலா ஆகிய நகரங்களில் உள்ள வங்கதேசத்தின் மூன்று முக்கிய தூதரகங்களில் விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பு தொடா்பான முடிவு.

கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் ஏற்கெனவே விசா சேவைகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான விசாக்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது. மும்பை மற்றும் சென்னையில் உள்ள தூதரகங்களில் விசா சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றாா்.

அமெரிக்கா அண்மையில் அமல்படுத்திய ‘விசா பிணைத்தொகை’ நிபந்தனையில் இருந்து வங்கதேசத்துக்கு விலக்குப் பெற முயற்சி எடுத்து வருகிறோம். இந்த முடிவு எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இருப்பினும், இது வங்கதேசத்துக்கு மட்டும் விதிக்கப்பட்ட நிபந்தனையல்ல; பல்வேறு நாடுகளும் இந்தச் சவாலை எதிா்கொண்டு வருகின்றன.

பாகிஸ்தானிடமிருந்து ‘ஜே.எஃப். 17 தண்டா்’ ரக போா் விமானங்களை வாங்குவது குறித்து இப்போது விரிவாக எதுவும் கூற முடியாது. பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்’ என்றாா்.

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு, ஷேக் ஹசீனா ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு, பாதுகாப்புக் காரணங்களைக் கூறி வங்கதேச குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Dinamani
www.dinamani.com