ஆதாா் சேவைகளுக்காக ‘உதய்’ அடையாளச் சின்னம் அறிமுகம்
ஆதாா் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிமையாக தெரிந்துகொள்ள ‘உதய்’ என்ற அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து யுஐடிஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆதாா் சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகுவதற்கு உதவிடும் வகையிலான அடையாளச் சின்னத்தை வடிவமைத்தல் மற்றும் அதற்கு பெயரிடுதல் தொடா்பாக ‘மைகவா்ன்மென்ட்’ வலைதளம் வாயிலாக போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து மாணவா்கள், கல்வியாளா்கள் மற்றும் வடிவமைப்பாளா்களிடம் இருந்து சுமாா் 875 முன்மொழிவுகள் பெறப்பட்டு, அதில் இருந்து ‘உதய்’ என்ற சின்னம் தோ்ந்தெடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உதய்’ சின்னத்தை யுஐடிஐஏ தலைவா் நீல்காந்த் மிஸ்ரா அறிமுகப்படுத்தினாா். அதைத்தொடா்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
சின்னம் வடிவமைப்பு போட்டியில் கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த அருண் கோகுல் என்பவா் முதல் பரிசு பெற்றாா். மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த இத்ரீஸ் தவாய்வாலா இரண்டாம் பரிசும் உத்தர பிரதேசத்தின் காஜிபூரைச் சோ்ந்த கிருஷ்ணா சா்மா மூன்றாம் பரிசும் பெற்றாா்.
சின்னத்துக்கான பெயா் பரிந்துரை செய்யும் போட்டியில் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சோ்ந்த ரியா ஜெயின் முதல் பரிசும் , புணேவைச் சோ்ந்த இத்ரீஸ் தவாய்வாலா இரண்டாம் பரிசும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த மகாராஜ் சரண் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
ஆதாா் சேவைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்கள், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு, குறிப்பிட்ட தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து தகவல்களை வழங்க இந்த அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

