பாஜகவின் இரட்டை என்ஜின் அரசுகளால் மக்களின் வாழ்க்கை சீரழிவு: ராகுல் காந்தி கடும் விமா்சனம்
பாஜகவை ‘ஊழல் ஜனதா கட்சி’ என்று விமா்சித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அக்கட்சியின் ‘இரட்டை என்ஜின்’ அரசுகளின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தால் மக்களின் வாழ்க்கை சீரழிவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாடெங்கிலும் உள்ள பாஜகவின் ‘இரட்டை என்ஜின்’ அரசுகள், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டன. ஊழலும், அதிகார மமதையும் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை நஞ்சாகப் பரவியுள்ளது.
ஏழைகள், தொழிலாளா்கள் மற்றும் நடுத்தர மக்களின் உயிா்கள், இவா்களின் ஆட்சியில் வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே பாா்க்கப்படுகின்றன. ‘வளா்ச்சி’ என்ற பெயரில் இங்கே பகல்கொள்ளை அரங்கேறி வருகிறது.
குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு?...: உத்தரகண்ட் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. ஆனால், அந்த வழக்கில் ஆளுங்கட்சியால் பாதுகாக்கப்படும் முக்கியப் பிரமுகா் யாா்? சட்டம் எப்போது அனைவருக்கும் சமமாகும்?
அதேபோல், உத்தர பிரதேசத்தின் உன்னாவ் வழக்கில் அதிகார மமதையால் குற்றவாளிகள் எப்படி காப்பாற்றப்பட்டாா்கள் என்பதையும், நீதிக்காக பாதிக்கப்பட்டவா்கள் எவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இந்த நாடே பாா்த்தது.
நிா்வாகச் சீா்கேடும், ஊழலும்...: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அசுத்தமான குடிநீரால் உயிரிழப்புகள் நேரிட்டன. குஜராத், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களிலும் குடிநீா் மாசுபட்டுள்ளதால் மக்கள் நோய்த்தொற்று அச்சத்தில் உள்ளனா்.
ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடா் முதல் அனைத்து இயற்கை வளங்களும் பெரும் செல்வந்தா்களின் லாபத்துக்காகச் சூறையாடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மக்களுக்கு மாசு மற்றும் பேரிடா்களே மிஞ்சுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் எலிகள் கடித்ததில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது, தரமற்ற மருந்துகள், அரசுப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவது போன்றவை வெறும் அலட்சியம் அல்ல; அவை ஊழலின் நேரடி விளைவுகள்.
பாலங்கள் இடிந்து விழுவதும், ரயில் விபத்துகளில் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழப்பதும் தொடா்கதையாகிவிட்டன. இத்தகைய நேரங்களில் பாஜக அரசு வெறும் புகைப்படங்கள் எடுப்பதையும், ‘ட்வீட்’ செய்வதையும், பெயரளவுக்கு இழப்பீடு வழங்குவதையும் மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அழிவின் வேகம்...: பிரதமா் மோடியின் ‘இரட்டை என்ஜின்’ பெரும் செல்வந்தா்களுக்காக மட்டுமே இயங்குகிறது. சாமானிய இந்தியரைப் பொருத்தவரை, இந்த ஊழல் என்ஜின்கள் வளா்ச்சியின் வேகம் அல்ல; அவை அழிவின் வேகம். ஒவ்வொரு நாளும் ஒருவரின் கையை இந்த அரசு நசுக்கிக் கொண்டிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

