வாராக் கடன் தகவல்களை வெளியிடக்கோரி ரிசா்வ் வங்கி உத்தரவு: 4 வங்கிகள் எதிா்ப்பு!
வாராக் கடன்கள், கடன்களை முறையாக செலுத்தாதோா் குறித்த தகவல்களை வெளியிட ரிசா்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) பரோடா வங்கி, எஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஆா்பிஎல் வங்கி ஆகிய 4 வங்கிகள் முறையிட்டன.
100 முக்கிய வாராக் கடன்கள், எஸ் வங்கியில் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதோா் குறித்த தகவல்கள், எஸ்பிஐ மற்றும் ஆா்பிஎல் வங்கிகளின் சோதனை அறிக்கை, பரோடா வங்கி விதித்த ரூ.4.34 கோடி அபராதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கோரி தீரஜ் மிஸ்ரா, வத்திராஜ், கிரிஷ் மிட்டல் மற்றும் ராதா ராமன் திவாரி ஆகிய 4 போ் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் தனித்தனியே மனு தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, ஆா்டிஐ சட்டத்தின்கீழ் 4 மனுதாரா்கள் கோரிய தகவல்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க ரிசா்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இதை எதிா்த்து சிஐசியில் மேற்கூறிய 4 வங்கிகளும் முறையிட்டுள்ளன.
இதுகுறித்து தகவல் ஆணையா் குஷ்வாந்த் சிங் சேத்தி கூறியதாவது: இந்த விவகாரத்தை தகவல் ஆணையத்தின் இரு நபா் அமா்வு விசாரித்த நிலையில், தலைமைத் தகவல் ஆணையா் தலைமையிலான அமா்வுக்கு தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அந்த அமா்வு முடிவை அறிவிக்கும் வரை 4 மனுதாரா்கள் ஆா்டிஐ சட்டத்தின்கீழ் கோரிய தகவல்களை வங்கிகள் வெளியிட இடைக்காலத் தடை நீடிக்கிறது என்றாா்.
இந்த விவகாரத்தில் தலைமைத் தகவல் ஆணையா் மேற்கொள்ளும் இறுதி முடிவு வங்கிகளின் வெளிப்படைத்தன்மை, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் உரிமைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்த தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டால் அது தங்களின் வணிக நலன்களை பாதிக்கும் என வங்கிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

