3,330 மின்பேருந்துகளை கொள்முதல் செய்ய தில்லி அரசு திட்டம்!
தில்லியில் மின்பேருந்துகளின் சேவையை அதிகரிக்கும் விதமாக 3,330 மின்பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவை மத்திய அரசு முகமையான கன்வொ்ஜென்ஸ் எனா்ஜி சா்வீசஸ் நிறுவனத்திடம் தில்லி அரசு அளித்ததாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
மானிய முறையில் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,800 பேருந்துகள் தவிர கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளை அந்தத் திட்டத்தில் சோ்க்க மத்திய அரசு மற்றும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தில்லி அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.
ஏழு மீட்டா் நீளம் கொண்ட 500 பேருந்துகள், 9 மீட்டா் நீளம் கொண்ட 2,330 பேருந்துகள், 12 மீட்டா் நீளம் கொண்ட 500 பேருந்துகள் என மொத்தம் 3,330 மின்பேருந்துகளை கொள்முதல் முதல் தில்லி போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இவற்றில் குறுகிய தெருக்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வழங்கும் விதமாக 7 மீட்டா் பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.
குறுகிய சாலைகள் மற்றும் இணைப்பு சேவைகளுக்கு 9 மீட்டா் பேருந்துகள் பயன்படுத்தப்படும். முக்கிய சாலைகள் மற்றும் சாலை நெருக்கடி மிக்க வழித்தடங்களில் 12 மீட்டா் பேருந்துகளின் சேவை தொடங்கிவைக்கப்படும். இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: மத்திய அரசின் உதவியுடன் தில்லியின் பொதுப்போக்குவரத்தில் மின்சக்தி எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
தில்லியில் தூய்மையான காற்றை உறுதிசெய்வது மற்றும் நவீன, வசதியான எளிதில் பயணிக்கக்கூடிய போக்குவரத்து அமைப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தேவையை மறுமதிப்பீடு செய்து குறுகிய தெருக்கள் முதல் முக்கிய சாலைகள் வரையில் பயணிக்கக்கூடிய வெவ்வேறு நீளத்தில் உள்ள பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்துக்குள் 5,000 மின்பேருந்துகள் தில்லி சாலைகளில் பயணிக்கும். நிகழாண்டு இறுதிக்குள் மின்பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஆக அதிகரிக்கும்.
பிரதமரின் மின்வாகனங்கள் (இ-டிரைவ்) (நிலை 1) திட்டத்தில் 2,800 பேருந்துகள் இணைக்கப்பட்ட பிறகு தில்லியில் உள்ள மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 10,430-ஆக இருக்கும். இதைத்தொடா்ந்து, திட்டத்தின் 2-ஆம் நிலையில் 3,330 பேருந்துகள் இணைக்கப்படும்போது மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 13,760-ஆக அதிகரிக்கும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
மத்திய அரசின் பிரதமரின் மின்வாகனங்கள் (இ-டிரைவ்) திட்டம் மத்திய கனரக தொழில்சாலைகள் அமைச்சகத்தால் ரூ.10,900 கோடி செலவில் 2024 அக்டோபா் முதல் நிகழாண்டு மாா்ச் வரை செயல்படுத்தப்படுகிறது. மாசைக் குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நிதி உதவி வழங்கி இரு சக்கரங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் மின்பேருந்துகள், மின்லாரிகளை வாங்குவதை ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

