

பிரதமர் அலுவலகம் 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம் :
புது தில்லி : இந்திய பிரதமர் அலுவலகம் 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
தில்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின்கீழ் புதிய பிரதமர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ரைசினியா ஹில்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமர் அலுவலகத்துக்கு இம்மாத இறுதிக்குள் இடம் மாற்றம் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய விஸ்டா திட்டத்தின்கீழ், குடியரசு துணைத் தலைவர் அலுவலகமும் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளும் திட்டமிடப்பட்ட 8 அமைச்சரவை அலுவலகங்களில் 3 அலுவலகங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய பிரதமர் அலுவலகமும் தயாராகி வருகிறது.
பொதுச் சேவைக்கான புனித இடம் என்ற கருப்பொருளை மையமாக வைத்தே புதிய பிரதமர் அலுவலகத்துக்கு சேவா தீர்த் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். அதன் அருகாமையிலேயே, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கான கட்டுமானமும் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பணிகளும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும், தற்போது பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியிலிருந்து பிரதமர் மோடி, புதிய இல்லத்துக்கு குடிபெயருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வளாகங்களை உள்ளடக்கிய புதிய பிரதமர் அலுவலக வளாகத்தில் சேவா தீர்த் 1-இல் பிரதமர் அலுவலகமும், சேவா தீர்த் 2-இல் கேபினட் அமைச்சரவையும், சேவா தீர்த் 3-இல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயலகமும் அலுவலகமும் செயல்பட உள்ளன.
அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேவா தீர்த் வளாகத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு வருகை தருவோருக்கு சர்வதேச நிலை வசதிகள் கிடைக்கும். மேலும், இந்திய கலை, கலாசாரம், பண்பாட்டுடன் இயைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாம். கேபினட் அமைச்சரவைக் கூட்டத்துக்கான தனி வளாகமும் அமைந்துள்ளது.
இந்திய விடுதலைக்குப்பின் பிரதமர் அலுவலகமானது வெளி விவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து, தெற்கு பிளாக் பகுதியில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. வடக்கு பிளாக் பகுதியில் உள்துறை மற்றும் நிதியமைச்சக அலுவலககங்கள் செயல்பட்ட நிலையில், இவ்விரு அலுவலகங்களும் இப்போது புதிய நாடாளுமன்ற வளாகத்திலுள்ள கார்தவ்ய பவனுக்கு இடமாற்றப்பட்டுவிட்டன.
ஆங்கிலேயே காலத்து கட்டுமானப் பகுதிகளான வடக்கு மற்றும் தெற்கு பிளாக் பகுதிகள் இனி பிரம்மாண்ட அருங்காட்சியமாக செயல்பட உள்ளன. இந்தியத் திருநாட்டின் பல ஆண்டு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதத்தில் இந்த அருங்கட்சியகம் அமைய உள்ளது. விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.