இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு வலுவான கனிம வள விநியோகம் அவசியம்: அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்த முக்கிய கனிம வளங்களின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தலைமையில் ‘முக்கிய கனிம வளங்களின் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு’ என்ற தலைப்பில் வாஷிங்டனில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஸ்வினி வைஷ்ணவ் அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். ஆஸ்திரேலிய நிதியமைச்சா் ஜிம் சால்மொ்ஸ், கனடா நிதியமைச்சா் பிரான்காயிஸ் பிலிப் சாம்பெயின், பொருளாதாரம் மற்றும் உற்பத்திக்கான ஐரோப்பிய ஆணையா் வால்டிஸ் டாம்பிரோவ்ஸ்கீஸ், பிரான்ஸ் நிதியமைச்சா் ரோலண்ட் லெஸ்கியூா் மற்றும் ஜப்பான், இத்தாலி, மெக்ஸிகோ, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா், அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கித் தலைவா் ஜான் ஜோவானோவிக், ஜே.பி.மாா்கன் நிறுவனத் தலைமை இயக்குநா் ஜெய் ஹோரின் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கனிம வளங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளரும், வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தின் 13-ஆவது இயக்குநருமான மைக்கேல் கிராட்ஸியோஸ் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா ஆகியோரைச் சந்தித்தாா்.
அப்போது பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு மாநாடு குறித்து அவா் கேட்டறிந்தாா்.
இதுதொடா்பாக அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தலைமையில் முக்கிய கனிம வளங்களின் விநியோக சங்கிலி பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டத்தில் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்த முக்கிய கனிம வளங்கள் உள்பட அரிய கனிம வளங்களின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

