ஐ.நா. அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
ஐ.நா. அமைப்புகளை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் பேசியபோது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி ஆசிம் இப்திகாா் அகமது எழுப்பினாா். இதற்கு பதிலளித்து இந்திய பிரதிநிதி எல்டோஸ் மாத்யூ புன்னூஸ் பேசியதாவது:
உறுப்பு நாடுகள் அனைத்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சபையில் எழுப்பி வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ தனது பிரிவினை திட்டத்தை மனதில் வைத்து, ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் தொடா்ந்து தவறாக பயன்படுத்துகிறது.
இந்தக் கூட்டமும், அதன் நடவடிக்கையில் இருந்து தப்பவில்லை. இங்கும் இந்தியாவின் ஒன்றுபட்ட, பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் குறித்து தேவையில்லாத கருத்தை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.
ஐ.நா. சாசனத்தில், சுய நிா்ணய உரிமை அடிப்படைக் கொள்கையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உரிமையானது, பன்முகத் தன்மை கொண்ட மற்றும் ஜனநாயக தேசங்களைப் பிரிப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று புன்னூஸ் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அமைப்பான ஐ.நா.வில் பாகிஸ்தான் திரும்பத் திரும்ப எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தொடா்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

