

மணிப்பூரில் சட்டவிரோதமாக பயிர்களை சாகுபடி செய்ததாகக் கூறி குகி இன மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜீலியாங்ராங் ஐக்கிய முன்னணி மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுவினர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் கசகசா பயிர்களை சட்டவிரோதமான சாகுபதி செய்ததாக குகி இன மக்களின் ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் மூதாதையர்களின் வரலாற்று சிறப்பு மிக்கப் பகுதிகளில் சட்டவிரோத சாகுபடி, போதைப்பொருள்கள் கடத்தல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் ஜீலியாங்ராங் ஐக்கிய முன்னணியினர் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டவிரோத சாகுபடியை தவிர்க்குமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனைக் கேட்காததால், சாகுபடி செய்து வைக்கப்பட்டிருந்த கிடங்குகள், நிலங்கள், பயிர்களை சேதப்படுத்தியதாக அறிக்கையில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கிடங்குகளை தீயிட்டு எரிக்கும்போது குகி இன மக்களின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பழங்குடி ஒற்றுமைக்கான குகி - ஸோ கூட்டமைப்பு, ''குகி இன மக்களின் வீடுகளுக்கு தீயிட்டு எரித்ததன் மூலம் மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரம் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும் அமைதியின்மையே நீடித்து வருகிறது.
காங்போக்பி மாவட்டத்தில் லங்ஜோல், லொய்போல் கோலன், கரம் வைபே, சாங்லங் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள குகி மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள குகி மக்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.