

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக முடிந்துள்ளது. தில்லியில் இன்று (ஜன. 27) நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஐரோப்பிய யூனியன் சாா்பில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் ஆகியோா் பங்கேற்றனர்.
18 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 96.6% சரக்கு ஏற்றுமதிகளுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இதன்மூலம் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2032-ல் இரு மடங்காக அதிகரிக்கும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இதனால், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நிறுவனங்கள் 4 பில்லியன் யூரோ வரை சேமிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு இணையாக, ஐரோப்பிய சந்தைககளில் இந்திய ஏற்றுமதிகளுக்கான இடம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் ஐரோப்பிய யூனியன் உறுதி அளித்துள்ளது.
எவற்றிற்கெல்லாம் வரி குறைப்பு!
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்படி, உலகில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படும் ஐரோப்பிய யூனியன் கார்களுக்கு 110% முதல் 10% வரை வரி விகிதமானது படிப்படியாக குறைக்கப்படும்.
அடுத்த 5 - 10 ஆண்டுகளில் ஆட்டோ உதிரி பாகங்கள் மீதான வரி முற்றிலுமாக நீக்கப்படும்.
தொழில்துறைப் பொருட்களைப் பொருத்தவரை, இயந்திரங்களுக்கு விதிக்கப்படும் 44% வரி பெரும்பாலும் படிப்படியாக நீக்கப்படும்.
ரசாயனங்களுக்கு விதிக்கப்படும் 22% வரி படிப்படியாக குறைக்கப்படும்.
மருந்துப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி 11% வரை உள்ள நிலையில், அதுவும் படிப்படியாக நீக்கப்படும்.
ஐரோப்பிய யூனியன் ஒயின்களுக்கான வரி 150 சதவீதமாக இருக்கும் நிலையில், அவை பாதியாக (75%) குறைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மீதான வரி 45% முதல் 0% வரை குறைக்கப்படும் என ஒப்பந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.