

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், 9 முறை போட்டியிட்டு வென்ற பாராமதி தொகுதியிலேயே இன்று விமான விபத்தில் பலியாகியுள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அஜீத் பவார் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதி விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வியாழக்கிழமை காலை சென்ற அஜீத் பவார், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும்போது நிலைதடுமாறிய விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து அஜீத் பவாரின் குடும்பத்தினர் பாராமதிக்கு விரைந்துள்ளனர்.
ஒரே தொகுதி, 34 ஆண்டுகள்...
மகாராஷ்டிர துணை முதல்வரான அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரைவிட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்ற அஜீத் பவார், நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய தலைவராகவுள்ள அஜீத் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அஜீத் பவார், முதல்முறையாக பாராமதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 1991 ஆம் ஆண்டு வெற்றிபெற்றார்.
அதே ஆண்டு, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாராமதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து 1995, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1991, 1995 தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு பிரசாரத்துக்காக சென்றபோது இன்று உயிரிழந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.