

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த மேலும் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் விமானிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தை கேப்டன் சுமித் கபூர் மற்றும் பெண் கேப்டன் சாம்பவி பதக் இயக்கியிருக்கிறார்கள். இருவருமே விபத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
வழக்கமான அரசியல் பிரசார பயணம் ஒன்று, துரதிருஷ்டவசமாக அஜீத் பவார் உள்ளிட்ட ஆறு பேரின் இன்னுயிர்களை பலிவாங்கியிருக்கிறது. சார்ட்டர்ட் ரியல்ஜெட் 45 ரக சிறிய விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் முழுவதும் தீப்பரவியது.
மும்பையிலிருந்து 8 மணிக்குப் புறப்பட்ட விமானம் பாராமதியில் 8.45க்கு தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. அதில் தீப்பற்றியதும் சில வெடிச் சத்தங்களும் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தை கேப்டன் சுமித் கபூர் மற்றும் பெண் கேப்டன் சாம்பவி பதக் இயக்கியிருக்கிறார்கள். இருவருமே, விமானங்களை இயக்குவதில் மிகவும் அனுபவம் கொண்டவர்கள் என்று சிறிய ரக விமானத்தை இயக்கும் விஎஸ்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் பலியாகியிருக்கிறார்கள்.
சாம்பவி பதக், ராணுவ அதிகாரியின் மகள். இவர் இந்திய விமானப் படை பால பாரதி பள்ளியில் படித்து மும்பையில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான படிப்புகளில் பட்டம் பெற்றிருக்கிறார்.
பிறகு, நியூ ஸிலாந்து சென்று அங்கு சர்வதேச வணிக விமானப் பயிற்சிப் பள்ளியில் விமானப் பயிற்சி எடுத்துள்ளார்.
மற்றொரு விமானி சுமித் கபூர், விமானங்களை இயக்குவதில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இருவருமே அதிக நேரங்கள் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானமும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்திருக்கவில்லை. வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மங்கலான வெளிச்சம் காரணமாக தரைப்பகுதியை விமானிகளால் பார்க்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் தரையிறங்க முயற்சித்திருக்கிறார்கள். விபத்து குறித்து விசாரணை தொடங்கியிருக்கிறது என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விமானிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் மோசமான கருத்துகளை யாரும் பகிர வேண்டாம், அவர்களும் உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.