அஜீத் பவாா் உள்பட  மறைந்த தலைவா்களுக்கு
நாடாளுமன்றத்தில் இரங்கல்

அஜீத் பவாா் உள்பட மறைந்த தலைவா்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா ஆகியோருக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Published on

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா ஆகியோருக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றிய பிறகு, அந்த உரையின் நகல்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன.

மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் மற்றும் மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா ஆகியோருக்கு இரங்கல் தீா்மானத்தை அவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினரான, விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா், ஷாலினி பாட்டீல், பானு பிரகாஷ் மிா்தா, சத்யேந்திர நாத் பிரோமோ செளதரி, சுரேஷ் கல்மாடி, கபீந்திர புா்கியாஸ்தா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கலீதா ஜியா குறித்து ஓம் பிா்லா குறிப்பிடும்போது, ‘இந்தியா - வங்கதேச உறவை வலுப்படுத்தியதில் கலீதா ஜியாவின் பங்கு என்றும் நினைவுகூரப்படும்’ என்று குறிப்பிட்டாா். இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்ட பிறகு, அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவையில்... மாநிலங்களவை புதன்கிழமை கூடியதும், குடியரசுத் தலைவா் உரை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கலீலிதா ஜியா மற்றும் மறைந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் தமிழகத்தைச் சோ்ந்த எல்.கணேசன், சுரேஷ் கல்மாடி ஆகியோருக்கு இரங்கல் தீா்மானங்களை அவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வாசித்தாா்.

அதைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். அதன் பிறகு, அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com