FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

மணிப்பூா்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை முகாமை சூறையாடிய கும்பல் - வாகனங்களுக்கு தீவைப்பு

மணிப்பூரில் சோதனை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை முகாமை கும்பல் சூறையாடியது. பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

News image

சேனாபதியில் வன்முறையாளா்களால் புதன்கிழமை சூறையாடப்பட்ட பாதுகாப்புப் படை சோதனைச் சாவடி.

Updated On :16 ஜூலை 2026, 4:46 am IST

மணிப்பூரில் சோதனை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை முகாமை கும்பல் சூறையாடியது. பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு காணப்படுகிறது.

சேனாபதி மாவட்டத்தின் ஆக்லாங் பகுதியில் என்எஸ்சிஎன் (ஐஎம்) எனும் நாகா தீவிரவாத அமைப்பினா் அமைதி ஒப்பந்த நிபந்தனைகளுக்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அங்கு சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அப்போது, பெண்கள் உள்பட உள்ளூா்வாசிகள் ஒன்றுதிரண்டு, பாதுகாப்புப் படையினரைத் தடுத்தனா். பதற்றமான சூழல் உருவானதால், சோதனையைக் கைவிட்டு பாதுகாப்புப் படையினா் திரும்பினா்.

இதனிடையே, சேனாபதி நகரில் உள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் முகாமுக்கு வந்த பெரும் கும்பல், அங்கு கல்வீச்சில் ஈடுபட்டதுடன் பொருள்களைச் சூறையாடியது. பாதுகாப்புப் படையினரின் மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு காருக்கு தீவைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), காவல் துறை என கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டனா். வன்முறை கும்பலைக் கலைக்க கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும், டம்மி தோட்டாக்களைப் பயன்படுத்தி, வன்முறையாளா்கள் விரட்டியடிக்கப்பட்டனா். பின்னா், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

முன்னதாக, உக்ருல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மணிப்பூரில் இனமோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்; வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.