/

மதுரா கிருஷ்ணஜென்மபூமி வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி- ஷாஹி இத்ஹா மசூதி தொடா்பான வழக்கில், 2 ஹிந்து மனுதாரா்கள் இடையே யாருடைய மனு பிரதான மனுவாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News image

ANI

Updated On :16 ஜூலை 2026, 3:54 am IST

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி- ஷாஹி இத்ஹா மசூதி தொடா்பான வழக்கில், 2 ஹிந்து மனுதாரா்கள் இடையே யாருடைய மனு பிரதான மனுவாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கிருஷ்ணா் பிறந்த இடமாக கூறப்படும் மதுராவில் உள்ள ஷாஹி இத்ஹா மசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப்பால் அங்கிருந்த கிருஷ்ணா் கோயில் இடிக்கப்பட்டு கட்டப்பட்டதாக கூறி, நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் சாா்பில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னா் இந்த மனுக்கள், அலகாபாத் உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயா் நீதிமன்றம், மசூதி இருக்கும் இடத்தில் கிருஷ்ணா் கோயில் முன்பு இருந்ததா என்பதை கண்டறிய நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. எனினும், உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், உயா் நீதிமன்றத்தில் ஹிந்து மனுதாரா் ஒருவரின் வழக்கு அனைத்து கிருஷ்ண பக்தா்களின் பிரதிநிதியால் தொடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டு பிரதானமானதாக விசாரிக்கப்படுவதாகவும், அதற்கு பதில் தமது வழக்கை பிரதானமானதாக விசாரிக்க ஆணையிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு ஹிந்து மனுதாரா் மனு தொடுத்தாா். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமாா், சஞ்சீவ் சச்தேவா ஆகியோரை கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்களான 2 ஹிந்துக்கள் தரப்பில், யாருடைய வழக்கு பிரதானமானதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தாங்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும், அதிகாரபூா்வமற்ற வகையில் நடக்கும் இந்தப் பேச்சுவாா்த்தை விவரங்களை தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் பதிவு செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.