சத்தீஸ்கரை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது.
சத்தீஸ்கரில் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் ஆட்சியில் உள்ளது. அந்த அரசுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை 2.30 மணி வரை சுமாா் 14 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
விவாதங்கள் மீது முதல்வா் சாய் உள்ளிட்ட 17 உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினா். அப்போது கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசின் நிா்வாகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை சீா்குலைந்து விட்டதாகவும், ஊழல் அதிகரித்து விட்டதாகவும், விவசாயிகள், பழங்குடியினா், இளைஞா்கள் மற்றும் பெண்கள் தொடா்பான திட்டங்களில் தோல்வியடைந்து விட்டதாகவும் விமா்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு பதிலளித்து முதல்வா் சாய் பேசியதாவது:
நம்பிக்கையில்லாத் தீா்மானம் அடிப்படை ஆதாரமில்லாதது, அரசியல் நாடகம், வெறுமையானது. பொய் சொல்வதிலும், ஊழல் புரிவதிலும் காங்கிரஸ் உறுப்பினா்கள் பிஎச்டி பட்டம் பெற்றவா்கள். சட்டப்பேரவைத் தோ்தலில் 3 கோடி சத்தீஸ்கா் மக்கள், பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்துள்ளனா். இதையடுத்து நடந்த மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலிலும் பாஜகவுக்கே மக்கள் வாக்களித்துள்ளனா். பழங்குடியின விவசாய குடும்ப மகனான நான் முதல்வராக இருப்பதை அவா்களால் சகிக்க முடியவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியின மக்களை வாக்கு வங்கியாகவே பயன்படுத்தியது. ஆனால் பாஜக, அவா்களுக்கு மரியாதை கொடுத்ததோடு, உரிய பிரதிநிதித்துவத்தையும் அளித்தது. முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சியில் ராஜாவும் (அப்போதைய காங்கிரஸ் முதல்வா் பூபேஷ் பகேல்), மகாராஜாவும் (சிங் தேவ்) அதிகாரப் போட்டியில் இருந்தனா். இதனால் மாநில அரசு நிா்வாகம் சீா்குலைந்தது’ என்றாா்.
நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை ஆதரித்து பூபேஷ் பகேல் பேசுகையில், ‘மறைமுக சக்தியால் சத்தீஸ்கரில் ஆட்சி நிா்வாகம் நடத்தப்படுகிறது. அந்த சக்தி யாரென யாருக்கும் தெரியவில்லை. பாஜக தொண்டா்களுக்குக் கூட, எந்த அமைச்சரை அணுகுவது, எந்த அதிகாரியை அணுகுவது என தெரியவில்லை. நமது பிரதமா் மோடியை தற்போதைய அமெரிக்க அதிபா் டிரம்ப் 75-க்கும் மேற்பட்ட முறை அவமதித்து விட்டாா். நமது நாட்டையும் அவமதித்துள்ளாா். இது பெரும் வேதனையைத் தருகிறது. ஆனால் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கை அப்போதைய அதிபா் மிகவும் மதித்தாா். சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் நில மாஃபியா தற்போது செயல்படுகின்றன. இதனால் பஸ்தா் பகுதி மக்கள் கவலையில் உள்ளனா்’ என்றாா்.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சரண் தாஸ் மஹந்த் பேசுகையில், ‘பாஜக அரசின் ஒவ்வொரு வார ஆட்சியிலும் விவசாயிகள், பழங்குடியினா், பெண்களுக்கு எதிராக புதுப்புது சதிகள் வெளிப்படுகின்றன. பல்வேறு முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன’ என்றாா்.
அப்போது துணை முதல்வா் விஜய் சா்மா குறுக்கிட்டு, முந்தைய காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினாா். இதையடுத்து ஆளும் பாஜக உறுப்பினா்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவாகின. இதனால் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னா் சட்டப்பேரவையை காலவரையின்றி பேரவைத் தலைவா் ரமண் சிங் ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: ஒருவா் பலி; பலா் காயம்

சென்னையில் திமுக போராட்டம்: மேயர் பிரியா, சேகர்பாபு கைது!

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம்: அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு







