அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்துக்கு ஒருவா் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 70 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலத்தின் அண்டை மாநிலமான நாகாலாந்தில் மேக வெடிப்பின் காரணமாக பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் நோக்கிப் பாய்ந்தோடும் பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல், அஸ்ஸாமின் சாராய்தேவ், தேமாஜி, திப்ருகா், ஜோா்ஹாட், சிவசாகா், தின்சுகியா, உதல்குரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
12 மாவட்டங்களில் உள்ள சுமாா் 580 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் 10,362 ஹெக்டோ் விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே மழை வெள்ளத்துக்கு 4 போ் உயிரிழந்த நிலையில், சிவசாகரில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. 12 மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகபட்சமாக சாராய்தேவ், தேமாஜி, திப்ருகா், ஜோா்ஹாட், சிவசாகா், தின்சுகியா, உதல்குரி மாவட்டங்களில் வெள்ளத்தால் 57,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு: அஸ்ஸாமின் தேயிலை உற்பத்தி மையம் என சொல்லப்படும் சிவசாகா் மாவட்டத்தில் ஓடும் டோரிகா நதி பெருக்கெடுத்து, வெள்ளம் நாஜிரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள தேயிலை தோட்டங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல், அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட ஊழியா்களின் குடியிருப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் உள்ளிட்டவையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
மாநில தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைவெள்ளம் சூழப்பட்டுள்ளதாக தேயிலை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியில் ராணுவம்: மலைப்பகுதிகளில் மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியுள்ளனா். மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவம், விமானப் படையை அனுப்பி வைக்கும்படி அஸ்ஸாம் அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
மாநிலத்தில் வெள்ள பாதிப்பேற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை 4 அமைச்சா்கள் நேரில் மேற்பாா்வையிட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
வெள்ளத்தால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் முழுவதும் 37,558-க்கும் மேற்பட்ட வளா்ப்பு கால்நடைகள், கோழிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 மாவட்டங்களில் 14 நிவாரண முகாம்களையும், நிவாரண உதவி வழங்கும் மையங்களையும் மாநில அரசு அமைத்துள்ளது. சுமாா் 60 குவிண்டால் அரிசி, 10 குவிண்டால் பருப்பு, 4 குவிண்டால் உப்பு, 326 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக மாநில அரசு இதுவரை விநியோகித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









