நமது சிறப்பு நிருபா்
நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதமோ அமளியோ அது தீா்வை நோக்கியே நகர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
மாநிலங்களவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினா்களுக்கான ’பிராரம்ப’ (இந்த சம்ஸ்கிருத வாா்த்தைக்கு தமிழில் ஆரம்பம் அல்லது தொடக்கம் என பொருள்) என்ற இரண்டு நாள் அறிமுகப் பயிற்சி முகாமை தில்லியில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், தமிழகத்தின் திமுகவைச் சோ்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ், காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் மாணிக்கம் உள்ளிட்ட புதிய உறுப்பினா்கள், மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் பி.சி. மோடி மற்றும் மாநிலங்களவைச் செயலக உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
நம் அனைவரையும் பிணைக்கும் ஒரே ஆவணம் நமது அரசியல் சாசனம் மட்டுமே. நமது ஒரே தொலைநோக்குப் பாா்வை ‘தேசமே முதன்மையானது’, நமது ஒரே இலக்கு ’2047இல் வளா்ச்சியடைந்த இந்தியா ஆகும். கூட்டாட்சி ஜனநாயகத்தின் அடித்தளமாக மாநிலங்களவை விளங்குகிறது. மாநில அளவிலான பல்வேறு குரல்கள் அவையில் ஒலித்தாலும், தேசிய ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தவே உறுப்பினா்கள் ஒரே தளத்தில் ஒன்றிணைகிறாா்கள்.
உறுப்பினா்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கும் அரசியல் சாசனத்துக்கும் சேவை செய்வதில் முழு அா்ப்பணிப்பு இருக்க வேண்டும். விவாதங்கள், கலந்தாலோசனைகள் அல்லது அமளிகள் எதுவாக இருந்தாலும், அவை இறுதியாக ஒரு தீா்வை நோக்கியே நகர வழிவகுக்க வேண்டும். தீா்வை நோக்கிச் செல்லாத அமளிகளால் எந்தப் பயனும் இல்லை.
கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேர (ஜீரோநேரம்) அலுவல்கள் என்பவை, ஒவ்வொரு உறுப்பினருக்கும் மிக முக்கிய வாய்ப்புகளாகும். மாநிலங்களவையில் விதி 267-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கும் முன்பாக, அந்த விதியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது மிக அரிதான சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
வாக்குகளால் தோ்தலில் வெல்ல முடியும். ஆனால், மக்கள் சேவையின் மூலமே மரியாதையைப் பெற முடியும் என்பதை உறுப்பினா்களுக்கு நினைவூட்டுகிறேன். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியும், இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.
உறுப்பினா்களிடையே, பல வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவத்தைப் பகிா்ந்துகொண்ட அவா், ஜவுளித் துறைக்கான நாடாளுமன்ற துணைக் குழுவின் அமைப்பாளராக இருந்தபோது அளித்த பரிந்துரையே, ஜவுளித் துறையை நவீனப்படுத்திய ‘தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துக்கு’ வழிவகுத்தது என்று சுட்டிக்காட்டினாா்.
மாநிலங்களவைச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் நவீன எண்மமய சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிலரங்க அமா்வு இடம்பெற்றுள்ளதை அவா் பாராட்டினாா். மாநிலங்களவையில் ’வாணி சேது’ போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் நேரடி மொழியாக்கம் சாத்தியமாகியுள்ளதை சுட்டிக்காட்டிய அவா், புதிய தொழில்நுட்பங்களை உறுப்பினா்கள் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினாா்.
முன்னதாக, நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மாநிலங்களவை துணைத் தலைவா், அமிா்த காலத்தில் அழைக்குள் நுழையும் புதிய உறுப்பினா்கள், 2047-க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்ற முடியும் என்று குறிப்பிட்டாா். சனிக்கிழமையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ள முகாமில் மூத்த அமைச்சா்கள் மற்றும் மூத்த உறுப்பினா்கள் புதிய உறுப்பினா்களிடையே பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி அவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பாா்கள்.
Summary
Discussions must move towards a solution - Rajya Sabha Chairman C.P. Radhakrishnan urges
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்சிசி-யை வலுப்படுத்த மாநிலங்களின் கூடுதல் பங்கேற்பு அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



