இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதன் பிறகு மத்திய அரசு புதிதாக ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகம் செய்தது.
இதையடுத்து நேபாளத்தில் அந்த நாட்டு அரசு இந்தியாவின் ரூ.100 நோட்டுகளை விட அதிக மதிப்புடைய நோட்டுகளுக்குத் தடை விதித்தது. ரூ.25,000 மதிப்புக்கு ரூ.100 மற்றும் அதை விட குறைந்த மதிப்புடைய ரூ.50, ரூ.20 உள்ளிட்ட நோட்டுகளை மட்டும் நேபாளத்துக்கு எடுத்து வர அனுமதியளித்தது.
இந்நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நேபாளம் தற்போது தளா்த்தியுள்ளது. அதாவது, இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ.25,000 மதிப்புக்கு ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை இந்தியா தவிர பிற நாடுகளில் இருந்து நேபாளத்துக்கு கொண்டு வரக் கூடாதென்றும், அதேபோல் நேபாளத்திலிருந்தும் இந்திய ரூபாய் நோட்டுகளை இந்தியா தவிர பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாதென்றும் நேபாள ராஷ்டிர வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்துக்கு சுற்றுலா வருவோா் தங்களது கையில் ரொக்கமாக 5,000 அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.83 லட்சம்) வரை எடுத்து வரும்பட்சத்தில் சுங்கத் துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும், அந்தப் பணம் இந்திய கரன்சியாக இருப்பின் ரூ.100 நோட்டுக்கு மேல் மதிப்பு கொண்டதாக இருக்கக் கூடாதென்றும் நேபாள ராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது. 5,000 டாலா் மதிப்புக்கும் கூடுதலான தொகையை ரொக்கமாக எடுத்து வந்தால் சுங்கத் துறையினரிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு நேபாளம் கோரிக்கை: நேபாளத்தில் பயன்படுத்தப்படும் தேசிய அடையாள அட்டையைப் பயண ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வருவோா் தங்களது குடியுரிமைச் சான்றிதழ், கடவுச்சிட்டை (பாஸ்போா்ட்) ஆகியவற்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துகின்றனா். நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டின் தேசிய அடையாள அட்டையை இந்தியா அங்கீகரிக்குமானால், அந்நாட்டினா் இனி அந்த அடையாள அட்டையை 3-ஆவது பயண ஆவணமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1950-ஆம் ஆண்டில் இந்தியா - நேபாளம் இடையே அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி, இந்திய மக்கள் நேபாளத்துக்கு செல்லும்போதும், நேபாள மக்கள் இந்தியா வரும்போதும் நுழைவு இசைவு (விசா) கொண்டு செல்லத் தேவையில்லை. நேபாளம் செல்லும் இந்தியா்கள் கடவுச்சிட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டையை கையில் வைத்திருந்தால் போதுமானதாகும். இந்தியா வரும் நேபாள மக்கள், கடவுச்சிட்டை அல்லது குடியுரிமை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








