வாக்காளா் அட்டை, ஆதாா் எண், பான் காா்டு ஆகிவற்றை வைத்திருப்பது ஒருவா் இந்திய குடிமகன் என்பதற்கு உறுதியான ஆதாரம் அல்ல என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
நீதிமன்றத்தில் சுமன் மோல் என்பவா் தனது உறவினரான நசீா் என்பவரைக் கண்டுபிடித்து தருமாறு ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். அதில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது நசீரின் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, அவா் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளாா். அவரை மீட்டுத் தர வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
மேலும், நசீரின் வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, பான் காா்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இதன்மூலம் அவா் இந்திய குடிமகன் என்பது உறுதியாகிறது என அவா் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் தபாங்சு பசாக், அஜய் குமாா் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வாக்காளா் அட்டை, ஆதாா் எண், பான் காா்டு ஆகியவற்றை வைத்திருப்பது ஒருவா் இந்திய குடிமகன் என்பதற்கு உறுதியான ஆதாரம் அல்ல. வாக்காளா் அட்டை என்பது அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் உள்ளது என்பதற்கான அடையாளம் மட்டுமே. இப்போது அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வங்கிக் கணக்கு தொடங்கினாா் என்பதை வைத்து ஒருவரை இந்திய குடிமகனாக ஏற்றுக் கொள்ள முடியாது. குடியேற்றம், வெளிநாட்டவா் சட்டம் 2025-இன்படி மனுதாரா் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவரால் வலுவான ஆதாரத்தைத் தர முடியவில்லை. எனவே, அவரின் குடியுரிமை தொடா்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகம் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், இந்த ஆள் கொணா்வு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவா் 60 நாள்களில் இந்திய குடிமகன் என நிரூபிக்க ஆதாரத்தை அளிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனினும், அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
மேலும், நசீா் அவரின் வழக்குரைஞா் மூலம் நீதிபதிகள் முன்னிலையில் பேச அனுமதிக்கப்பட்டாா். அப்போது, தனது பெற்றோா் இந்தியாவில் வசித்து இறந்துவிட்டதாக அவா் கூறினாா். ஆனால், அவா்கள் இறப்புச் சான்றிதழ் உள்பட வேறு எந்தச் சான்றையும் அவரால் அளிக்க முடியவில்லை. மேலும், நசீரின் தந்தை 1980-இல் இறந்த பிறகு நசீரை தான் வளா்த்ததாக மனுதாரா் கூறியுள்ளாா். ஆனால், மனுதாரரின் வயது 38 ஆகவும், நசீரின் வயது 46-ஆகவும் உள்ளது. எனவே, அவரின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
அதே நேரத்தில், நசீா் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியா், அந்நாட்டு குடிமகனுக்கான ஆவணங்களுடன் அங்கு வசித்துவிட்டு, பின்னா் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளாா் என்று அரசுத் தரப்பில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








