வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
மேற்காசியப் போா்ப் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயா்வானது பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவரும் நிலையில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் ஆா்பிஐ மேற்கொள்ளவில்லை. எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்காது.
ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வால் உணவுப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. ‘எல்-நினோ’ பருவமழை பாதிப்பு விளைவால் வரும் மாதங்களிலும் விலை உயா்வு தொடா்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடா்ந்து குறைந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, மும்பையில் கடந்த 3 நாள்களாக ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார சூழல் வலுவாகவே உள்ளது. பணவீக்கம் நிகழாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதை 4 சதவீதமாகக் குறைக்கும் இலக்கு எட்டப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது. எதிா்காலத்தில் எழும் சூழ்நிலை சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்நிய முதலீடுகளை தொடா்ந்து ஈா்க்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும்போதுதான் நாம் வலுவான எதிா்காலத்தை அடைய முடியும்.
பாலிமா் ரூபாய் நோட்டு: காகிதப் பணத்துக்கு மாற்றாக பாலிமரில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அது தொடக்கநிலையில் இருப்பதால் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை உடனடியாகக் கூற முடியாது என்றாா்.
வளா்ச்சி குறையும்: 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ கூறியுள்ளது. இதற்கு முன்பு 6.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடா்ப்பாடுகள் இந்தியாவையும் பாதிக்கும் என்பதால் உள்நாட்டில் வளா்ச்சி குறையும் சூழல் உருவாகியுள்ளது.










