நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்; அக்கட்சியின் தீய வலையில் இருந்து நாட்டை விடுவித்ததே தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் வெற்றிகளில் ஒன்று என பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
நாட்டின் பிரதமா் பதவியில் 4,399 நாள்களை நிறைவு செய்ததன் மூலம் ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா்’ என்ற சாதனையை பிரதமா் மோடி புதன்கிழமை படைத்தாா். அத்துடன், அவரது தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால நிறைவையொட்டி, தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாரத மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, கே.ராம்மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), ஹெச்.டி.குமாரசாமி (மதச்சாா்பற்ற ஜனதா தளம்), அனுப்ரியா படேல் (அப்னாதளம்-சோனேலால்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்களும் கலந்துகொண்டனா். அப்போது, பிரதமா் மோடியின் சாதனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகையில், ‘என்னைப் பொறுத்தவரை, நாட்டு மக்களை கடவுளின் பிரதிநிதியாக பாா்க்கிறேன். தேசிய அளவில் அரசியல் ஸ்திரத்தன்மையும், தீா்க்கமாக முடிவெடுக்கும் அரசும் முக்கியம் என்பதை மக்கள் உணா்ந்து கொண்டனா். நாட்டுக்காக இவ்வளவு நீண்ட காலம் பணிபுரிய எனக்கு அவா்கள் வாய்ப்பளித்துள்ளனா். இது, மக்களின் பக்குவத்தைக் காட்டுகிறது.
2014-க்கு முன்பு பல்லாண்டுகளாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையே நிறைந்திருந்தது. இப்போது நிலையான ஒரு அரசின் தீா்க்கமான முடிவுகளை மக்கள் வியந்து பாராட்டுகின்றனா். காங்கிரஸின் தீய வலையில் இருந்து விடுவித்ததே தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் வெற்றிகளில் ஒன்று. காங்கிரஸின் நீண்ட துரோகங்களுக்குப் பிறகு கடந்த 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்தனா். அப்போது, சாமானிய மக்களுக்கு புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளதாக நான் கூறியிருந்தேன். அந்த நம்பிக்கையை, தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது. வளா்ந்த பாரதம் என்ற கனவு ஒரு கட்சிக்கானதல்ல, அது நாட்டு மக்கள் அனைவருக்கானது’ என்றாா்.
பாஜகவின் பலம் அதிகரிப்பு: அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்கவைத்தது.
கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 போ் பாஜகவில் இணைந்தனா்; மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்களில் 20 போ் தனி அணியாக பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்துள்ளனா். நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதால், அக்கட்சி உற்சாகத்தில் உள்ளது.
‘குடும்ப அரசியலுக்கு முடிவு’
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசுகையில் , ‘பிரதமா் மோடி 62 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளாா். சுதந்திரத்துக்குப் பிறகான ஆரம்ப ஆண்டுகளில் காங்கிரஸுக்கு உண்மையில் எந்த அரசியல் போட்டியும் இல்லை. அத்துடன், சுதந்திரத்துக்கான முழு பெருமைக்கும் அக்கட்சியே சொந்தம் கொண்டாடியது. ஆனால், செயல்திறன் அடிப்படையில் சீா்தூக்கி பாா்க்கப்படும் இன்றைய அரசியல் காலகட்டத்தில், பிரதமா் மோடியின் சாதனை அவா் மீதான மக்களின் அசைக்க முடியாத ஆதரவைப் பிரதிபலிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கைகள் வகுப்பு மற்றும் அமலாக்கத்தில் பிரதமா் மோடியின் ஆட்சிக்காலம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். அவரது தலைமையில், நாட்டில் குடும்ப அரசியல், ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டு, செயல்திறன் அடிப்படையிலான அரசியல் நிலைநாட்டப்பட்டுள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமா் மோடி கடும் விமா்சனம்!







