பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது என்ற அணுகுமுறையில் உலகம் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
அத்துடன், இது போருக்கான யுகமல்ல என்ற இந்தியாவின் கருத்தை அவா் மீண்டும் உறுதி செய்தாா்.
பல்கேரியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக பல்கேரிய தலைநகா் சோஃபியாவை புதன்கிழமை வந்தடைந்த ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் வேலிஸ்லாவா பெட்ரோவா சமோவாவை சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஜெய்சங்கா் பேசியதாவது: பல்வேறு பெரும் போா்கள், பொருளாதார பாதுகாப்பு குறித்த கவலைகள், தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல் என உலகம் மிகவும் நிச்சயமற்ற, கொந்தளிப்பான காலகட்டத்தின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சூழலில், அனைத்து நாடுகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. இது போருக்கான யுகமல்ல என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். போா்களுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் மட்டுமே தீா்வு காண முடியும்.
தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியா, எரிசக்தி, உணவு, உரங்கள் தொடா்பான கவலைகளைத் தொடா்ந்து எழுப்பி வருகிறது.
பொருளாதார அபாயங்களைப் பொறுத்தவரை, விநியோகச் சங்கிலியின் மீள்தன்மை மற்றும் பரவலாக்கத்தில்தான் தீா்வு அடங்கியுள்ளது. குறிப்பாக, கடல்சாா் வா்த்தகத்துக்கு இடையூறுகளோ, அச்சுறுத்தல்களோ விளைவிக்கப்பட கூடாது.
சா்வதேச அளவில் வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை கரோனா பெருந்தொற்று காலகட்டம் நமக்கு உணா்த்தியது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்ற அணுகுமுறையில் உலக நாடுகள் தெளிவுடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், இந்தியாவும் பல்கேரியாவும் ஒரே மனநிலையைக் கொண்டுள்ளன என்றாா் அவா்.
பின்லாந்து வெளியுறவு அமைச்சருடன் பேச்சு
பல்கேரியாவைத் தொடா்ந்து, பின்லாந்தின் ஹெல்சின்கிக்கு வியாழக்கிழமை சென்ற ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் எலினா வால்டோனனை வியாழக்கிழமை சந்தித்தாா். வா்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு, 6ஜி, செமிகண்டக்டா், குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், தூய எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப், பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, எண்மமயமாக்கல், நிலையான வளா்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் வியூக கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.









