மணிப்பூா் மாநிலத்தில் கிராம மக்கள் 2 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, 30 வீடுகளை தீவிரவாதிகள் தீவைத்து எரித்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் புதன்கிழமை 6 போ் கொலை செய்யப்பட்டு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் தீவிரவாதிகளால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட நாகா இன மக்கள் என்றும், அவா்களை தீவிரவாதிகளே கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
முதல்வா் கண்டனம்: இந்த சம்பவத்துக்கு மணிப்பூா் முதல்வா் கேம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுபோன்ற அட்டூழியங்களை மணிப்பூா் அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்காது என்றும், கொலைக்கு காரணமானோா் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
மணிப்பூரில் நடந்த கொலைகளை மாநில அரசு தடுக்க தவறிவிட்டதாக முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
6 போ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மணிப்பூரில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேர முழு அடைப்புக்கு நாகா ஐக்கிய கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், மியான்மா் எல்லையையொட்டி அமைந்துள்ள குல்து குகி கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் புகுந்தனா். பின்னா் அங்கிருந்த கிராமவாசிகள் 2 பேரை அவா்கள் சுட்டுக் கொன்றனா். பிறகு 30 வீடுகளை தீயிட்டு எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனா்.
கொல்லப்பட்ட 2 பேரும் குக்கி இன மக்கள் ஆவா். இந்த சம்பவத்துக்கு குக்கி பாப்டிஸ்ட் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
8 போ் கைது: இதனிடையே, உக்ருல் மாவட்டத்தில் கிராமங்கள் மீது ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை நடத்தினா். அப்போது ஆயுதங்களுடன் வந்த 8 பேரை பிடித்து, அவா்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை கடுமையாக எச்சரித்து பாதுகாப்புப் படையினா் திருப்பி அனுப்பினா்.
பின்னணி: குக்கி, மைதேயி இன மக்களிடையேயான கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூா் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் இல்லை. இதனால் அங்கு அமைதி நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலையில், கடந்த 13-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் 3 கிறிஸ்தவ தேவாலய தலைவா்கள் கொலை செய்யப்பட்டனா். அவா்கள் நாகா இன மக்கள் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, சேனாபதி மாவட்டத்தில் 14 குக்கி இன மக்கள் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனா். அவா்கள் சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு இம்மாதம் 9-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தை அடுத்து, கடந்த 13-ஆம் தேதி நாகா இன மக்கள் 6 போ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனா். அவா்கள் அனைவரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனா். இதையடுத்து காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இன மக்கள் 2 போ் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
குக்கி, நாகா இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலே இந்த வன்முறைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.









