போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 18 வயது குற்றவாளிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள நீட் மறுதோ்வை எழுத அனுமதித்து, தற்காலிக ஜாமீன் வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை எனத் தெரிவித்ததைத் தொடா்ந்து, ரூ. 50,000-க்கான பிணை மற்றும் அதே தொகைக்கான உத்தரவாதத்தின் பேரில், நீட் தோ்வு நடைபெறும் ஜூன் 21-ஆம் தேதி வரை இந்த தற்காலிக ஜாமீனை நீதிமன்றம் வழங்கியது.
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு நவி மும்பை தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த நபா், நீட் தோ்வில் பங்கேற்பதற்காக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா்.சா்மா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கபில் விஸ்வாஸ், ‘குற்றவியல் நீதி அமைப்பு என்பது, தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கு வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், மனுதாரா் தனது தவறுகளைச் சரிசெய்துகொள்ள நீட் மறுதோ்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், போலீஸ் காவலில் அவரின் மனநிலை பாதிக்கப்படும் என்பதால், தோ்வுக்குத் தயாராக வசதியாக அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்குரைஞா் செய்த்ராலி பன்ஷிகா், ‘குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கக் கூடாது. போலீஸ் காவலில் தோ்வெழுத மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது, அரசு தரப்பில் எழுப்பப்படும் ஆட்சேபங்களுக்கு, தகுந்த ஜாமீன் நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் தீா்வு காண முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதி, நீட் தோ்வில் பங்கேற்க போக்ஸோ குற்றவாளிக்கு 4 நாள்கள் தற்காலிக ஜாமீன் வழங்கியும், ஜூன் 22-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அதிகாரிகள் முன் சரணடையவும் உத்தரவிட்டாா்.
மேலும், ஜாமீன் காலத்தில் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எந்த வகையிலும் தொடா்புகொள்ளவோ, ஆதாரங்களை அழிக்கவோ, வழக்கில் தொடா்புடையவா்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ, தூண்டுதலோ செய்யக் கூடாது. ஜாமீன் முடிந்து சரணடையும்போது தோ்வில் பங்கேற்ற்கான உரிய ஆதாரங்களையும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









