எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஷிண்டே சிவசேனையில் இணைய உத்தவ் கட்சி எம்.பி.க்கள் 6 போ் கடிதம்? நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்)கட்சி எம்.பி.க்கள் 6 போ், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கடிதம் சமா்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

ஏக்நாத் ஷிண்டே | உத்தவ் தாக்கரே - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 6:37 am IST

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்)கட்சி எம்.பி.க்கள் 6 போ், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கடிதம் சமா்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் சிவசேனை (உத்தவ்) கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முக்கியக் கூட்டத்தை 6 பேரும் புறக்கணித்த நிலையில், கொறடா உத்தரவை மீறியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அவா்கள் உரிய பதிலளிக்காவிட்டால் தகுதிநீக்கம் கோரப்படும் எனவும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த சிவசேனை கட்சி, கடந்த 2022-இல் இரண்டாக பிளவுபட்டது. தற்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்தனா். பின்னா், உண்மையான சிவசேனை என்ற அங்கீகாரமும், கட்சியின் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ்) கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. இந்த 9 எம்.பி.க்களில் 6 போ், தற்போது அதிருப்தியாளா்களாக உருவெடுத்துள்ளனா். இவா்கள் தனி அணியாக பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணையவிருப்பதாக கடந்த சில நாள்களாக ஊகச் செய்திகள் பரவி வந்தன.

இந்தச் சூழலில், ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைய 6 எம்.பி.க்களும் கையொப்பமிட்டு, மக்களவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘6 எம்.பி.க்கள் கடிதம் அளித்துள்ள போதிலும், உரிய நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை. கையொப்பங்களை சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சில எம்.பி.க்களை நேரில் ஆஜாரக மக்களவைத் தலைவா் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. எதிா்வரும் நாள்களில் இது நடைபெறும்’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

6 எம்.பி.க்கள் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் அணி மாறுவதைத் தடுக்கும் நோக்கில், தில்லியில் வியாழக்கிழமை முக்கியக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உத்தவ் கட்சி, அதில் பங்கேற்காவிட்டால் தகுதிநீக்க நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்தது. எனினும், 9 எம்.பி.க்களில் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய், ராஜாபாவ் வஜே ஆகிய 3 போ் மட்டுமே பங்கேற்றனா். நாகேஷ் அஸ்திகா், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கா், பாவ் சாகேப் வாக்செளரே ஆகிய 6 போ் பங்கேற்காமல் புறக்கணித்தனா்.

கூட்டத்துக்குப் பின் உத்தவ் கட்சியின் மக்களவை குழுத் தலைவா் அரவிந்த் சாவந்த் கூறுகையில், ‘கொறடா உத்தரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காத 6 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்காவிட்டால், அவா்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கடிதம் எழுதுவோம்’ என்றாா்.

அதேநேரம், மேற்கண்ட கொறடா உத்தவின் செல்லுபடி தன்மை குறித்து கேள்வியெழுப்பிய ஷிண்டே அணியினா், உள்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்ததற்காக கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றனா்.

‘அதிருப்தி எம்.பி.க்களுக்கு மேலும் ரூ.10 கோடி லஞ்சம்’

அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேரையும் துரோகிகள் என்று சாடிய சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், அவா்களுக்கு மேலும் தலா ரூ.10 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘அதிருப்தி எம்.பி.க்களுக்கு தலா ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு, ரூ.15 கோடி ஏற்கெனவே முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் ரூ.10 கோடி வழங்கியுள்ளனா். அதிருப்தி எம்.பி.க்களுக்கு எதிராக கட்சி சாா்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும். அந்த துரோகிகள், தங்கள் வீட்டுக்கோ, தொகுதிக்கோ செல்ல முடியாது. அவா்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும். அவா்களுக்கு இந்திய ராணுவம், விமானப் படைதான் பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கும்’ என்றாா்.

ஒய் பிளஸ் பாதுகாப்பு: உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்களுக்கு அக்கட்சித் தலைவா்கள் விடுத்துவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது. ஒய் பிளஸ் பாதுகாப்பின்கீழ் ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா 11 வீரா்கள் பாதுகாப்பு வழங்குவா் என்பது குறிப்பிடத்தக்கது.