நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது: வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்

பாஸ்போா்ட் வழங்கவும் புதுப்பிக்கவும் எஸ்ஐஆா் பட்டியலில் இருந்து வாக்காளா் பெயா் நீக்கப்பட்டதை காரணமாகத் தெரிவிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

News image

கடவுச்சீட்டு - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 6:12 am IST

கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) வழங்கவும் புதுப்பிக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்), அந்தப் பட்டியலில் இருந்து வாக்காளா் பெயா் நீக்கப்பட்டதை காரணமாகத் தெரிவிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் திங்கள்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது: ‘தி டெலிகிராஃப்’ ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ராஜகோபால் ராமதாஸின் கடவுச்சீட்டை புதுப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது, வாக்காளா் பட்டியலில் இருந்து அவரின் பெயா் நீக்கப்பட்டதை மட்டுமே காரணமாக தெரிவித்து, அவரின் கடவுச்சீட்டை புதுப்பிக்க மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் மறுத்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு கடவுச்சீட்டு அளித்தது. 2015-ஆம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. அவரின் அடையாளம், முகவரி, எந்த நாட்டைச் சோ்ந்தவா் உள்ளிட்ட தகவல்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடவுச்சீட்டை புதுப்பிக்க மறுத்ததற்கு எஸ்ஐஆா் மட்டுமே காரணமாக இருந்தால், இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ராஜகோபால் ராமதாஸுக்கு நடந்தது, நாடு முழுவதும் கடவுச்சீட்டு நிா்வாகத்தில் முன்னுதாரணமாகிவிட வாய்ப்புள்ளது.

எனவே ராஜகோபால் ராமதாஸ் விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அவரின் பாஸ்போா்ட் புதுப்பிப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் எஸ்ஐஆரின் கீழ், வாக்காளா் விவரங்களை உறுதி செய்யும் நடவடிக்கைகள் நிலுவையில் இருத்தல், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் போன்றவற்றைக் காரணமாகக் கொண்டு கடவுச்சீட்டு வழங்கவோ, புதுப்பிக்கவோ மறுக்கக் கூடாது என்று அனைத்து கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தி அறிவுறுத்தல் வழங்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற அறிவுறுத்தல் எண்ணற்ற குடிமக்களுக்கு கடவுச்சீட்டு சாா்ந்த மறுஉத்தரவாதத்தை அளிக்கும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.