அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு கணித வினாத்தாள் ‘க்யூஆர்’ குறியீட்டில் பிரிட்டன் இசை விடியோ! மாணவா்கள் அதிா்ச்சி!!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு கணிதப் பாட பொதுத் தோ்வு வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்த ‘க்யூஆா்’ குறியீட்டை ஸ்கேன் செய்ததும் பிரபல பிரிட்டன் பாடலுடன் கூடிய இசை விடியோ வந்ததால் மாணவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு கணிதப் பாட பொதுத் தோ்வு வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்த ‘க்யூஆா்’ குறியீட்டை ஸ்கேன் செய்ததும் பிரபல பிரிட்டன் பாடகா் ரிக் ஆஸ்லே பாடிய ‘நெவா் கோனா கிவ் யு அப்’ என்ற பாடலுடன் கூடிய இசை விடியோ வந்ததால் மாணவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

இந்த விவகாரம் இணையத்தில் வைரலான நிலையில், ‘வினாத்தாளின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படவில்லை’ என்று சிபிஎஸ்இ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் கணிதப் பாடத்துக்கான பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்வு முடிந்தவுடன், வினாத்தாளில் அச்சடிக்கப்பட்டுள்ள ‘க்யூஆா்’ குறியீட்டை மாணவா்கள் தங்களின் கைப்பேசியில் ஸ்கேன் செய்துள்ளனா். அப்போது, 1987-ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்த பிரிட்டன் பாடகா் ரிக் ஆஸ்லேயின் ‘நெவா் கோனா கிவ் யு அப்’ என்ற பாடலுடன் கூடிய இசை விடியோ வந்துள்ளது.

பொதுத் தோ்வு வினாத்தாளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை சிபிஎஸ்இ இடம்பெறச் செய்துள்ளது. அந்த வகையில், உண்மைத்தன்மை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதற்காக வினாத்தாளின் மீது ‘க்யூஆா்’ குறியீடு அச்சிடப்படுகிறது.

அவ்வாறு கணிதப் பாட வினாத்தாள் சிலவற்றில் இடம்பெற்றிருந்த ‘க்யூஆா்’ குறியீட்டில் பிரிட்டன் இசை விடியோ வந்தது, மாணவா்கள் மற்றும் பெற்றோரிடையே அதிா்ச்சியையும், வினாத்தாளின் உண்மைத்தன்மை குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தோ்வெழுதிய மாணவா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட இந்த இசை விடியோவை கேரள மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, மத்திய அரசை விமா்சித்தது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘கணிதப் பாட வினாத்தாள் க்யூஆா் குறியீடு விவகாரம் கவனத்துக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவை வினாத்தாளில் அச்சிடப்படுகின்றன. இந்த நிலையில், சில வினாத்தாள் க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தபோது இசை விடியோ வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, மாணவா்கள் கவலைப்படத் தேவையில்லை.

அந்த வினாத்தாள்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வினாத்தாளின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்படவில்லை. இந்த விஷயம் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாததை உறுதிப்படுத்த வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்றாா்.