/

ஒரு மாதத்திற்கு சராசரியாக 31 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்தும் இந்தியர்கள்!

இந்தியர்கள் மொபைல் போனில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 31 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாக நோக்கியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

News image

மொபைல்

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 10:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியர்கள் மொபைல் போனில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 31 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாக நோக்கியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக ஒரு நபர் மாதத்திற்கு 31 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்துவதாக 2025 ஆம் ஆண்டுக்கான டேட்டா பயன்பாடு பற்றிய அறிக்கையில் நோக்கியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் சராசரி 27.5 ஜிபி-யை விட அதிகமாகும். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ல் 5ஜி பயன்பாடு அதிகளவு உயர்ந்துள்ளது.

மெட்ரோ நகரங்கள் 5ஜி பயன்பாட்டில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதாகவும், மொத்த மொபைல் டேட்டா பயன்பாட்டில் 58% 5ஜி தொழில்நுட்பத்தின் பங்காக இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி நோக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சராசரியாக ஒரு நபரின் மொபைல் டேட்டா பயன்பாடு 2025-ல் 31 ஜிபி ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், 18% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட மொபைல் டேட்டாவின் விரைவான சேவையையும், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, 4கே வீடியோ பயன்பாடு மற்றும் கிளவுட் கேமிங் போன்ற அதிக டேட்டா தேவைப்படும் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது," என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 27 பில்லியன் ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

5ஜி பயன்பாட்டில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பயன்பாட்டாளராக உருவெடுத்துள்ளது.

அதிவேக 5ஜி பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் வருகையால் இந்தியாவின் மொபைல் இணையப் பயன்பாடு புதிய பரிணாமத்தை நோக்கிச் செல்கிறது.

இதுபற்றிப் பேசிய நோக்கியா நிறுவனத்தின் இந்திய அதிகாரி விபா மேஹ்ரா ”அறிவார்ந்த சேவைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நெட்வொர்க்குகள் உருமாறி வருவதால், அதிக செயல்திறன் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாரான இணைய உள்கட்டமைப்பை உருவாக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நோக்கியா உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

மிகக் குறைந்த விலையில் மலிவு விலை 5ஜி தொலைபேசிகள் விற்பனையில் ஆண்டுதோறும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சியே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-ல் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் 90%-க்கும் அதிகமானவை 5ஜி பயன்பாடு கொண்டவை.

இதன்படி, இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 5ஜி பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.