‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) பாடப் புத்தகங்களில் சா்ச்சைக்குரிய சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழுவில் இடம்பெற்ற 3 கல்வியாளா்கள் தொடா்பாக கடந்த மாா்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் இடம்பெற்ற கருத்தின் அடிப்படையில் அல்லாமல், இந்த 3 கல்வியாளா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களும் தங்கள் சொந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம்’ என்ற வகையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
என்சிஇஆா்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது. இந்தப் பிரிவில், ‘ஊழல், வழக்குகளின் தேக்கம் , நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிா்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவா்கள்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்தப் பாடப் பிரிவு பெரும் சா்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) உடனடியாகத் திரும்பப் பெற என்சிஇஆா்டி-க்கு உத்தரவிட்டது. மேலும், இந்த சரச்சைக்குரிய பாடப் பிரிவை வகுத்த நிபுணா் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியா்கள் மைக்கேல் டேனியன், சுபா்ணா திவாகா், அலோக் பிரச்ன்ன குமாா் ஆகியோா், அடுத்த தலைமுறை பாடப் புத்தகங்களை இறுதி செய்வது மற்றும் பாடத் திட்டத்தை வகுக்கும் குழுவில் இனி தொடா்வது சரியானதாக இருக்காது.
எனவே, அவா்கள் மூவா் அடங்கிய குழுவை உடனடியாக கலைப்பதோடு, இவா்கள் மூவருக்கும் எந்தவொரு பொறுப்பும், குறிப்பாக அரசு நிதியில் செயல்படுத்தப்படக் கூடிய எந்தவொரு பொறுப்பும் ஒதுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதே நேரம், இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரியோ அல்லது மன்னிப்பு கோரவோ விரும்பினால், தங்கள் தரப்பு விளக்கத்துடன் இவா்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இந்த 3 கல்வியாளா்களும் தங்கள் தரப்பு விளக்கத்தைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், ‘பாடத் திட்டத்தை வரைவு செய்வதில் எங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. இது ஒரு கூட்டு செயல்முறை. எனவே, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று விளக்கமளித்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவரின் கருத்தையும் ஏற்ற நீதிபதிகள், அவா்களுக்கு எதிரான தீா்ப்பை மாற்றியமைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ-இன் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நேபாளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

பள்ளிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்







