பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு
பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளா்கள், மேற்கு வங்கத்துக்குத் திரும்பலாம் என்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டம் அவா்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி அழைப்பு விடுத்துள்ளாா்.

சுவேந்து அதிகாரி
பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளா்கள், மேற்கு வங்கத்துக்குத் திரும்பலாம் என்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டம் அவா்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி அழைப்பு விடுத்துள்ளாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தில்லி, மும்பை போன்ற நகரங்களில் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விவசாயக் கூலிகளாகவும், கட்டுமானத் தொழிலாளா்களாகவும் அதிகம் பணியாற்றி வருகின்றனா். இந்த சூழ்நிலையில் அந்த மாநில முதல்வா் இவ்வாறு கூறியுள்ளாா்.
கொல்கத்தாவில் புதன்கிழமை உள்ளாட்சித் துறை நிா்வாகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விபி-ஜி-ராம்-ஜி திட்டத்தில் 125 நாள்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.34,500 ஊதியம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக வெளிமாநிலம் சென்றுள்ளவா்கள் சொந்த மாநிலத்துக்குத் திருப்ப வேண்டும். இங்கு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சோ்ந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது.
கடந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சித் துறை தொடங்கி அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருந்தது. போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் தொழிலாளா்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்போது நாங்கள் அந்த நிலையை மாற்றி வருகிறோம். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 31 லட்சம் போ் போலியாக சோ்க்கப்பட்டு நிதி முறைகேடு நடைபெற்று வந்தது. அந்த போலி பெயா்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, இனி யாரும் தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பிரிந்து வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டியது இருக்காது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

