சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

உச்சநீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவுக்கு தடை விதித்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலி கனகசபை மண்டபத்தில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வேண்டுமா, இல்லையா என்பதுதான் வழக்கின் மைய பிரச்னையாகும். கனகசபை என்பது நடராஜர் சன்னதிக்கு முன் உள்ள உயர்த்தப்பட்ட மண்டபம். அங்கு வழக்கமாக சில சடங்குகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அங்கு ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன.
அந்தப் புகார்களை விசாரித்த கடலூர் மாவட்ட ஆட்சியர், 2022-இல் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசு, மே 17, 2022 அன்று அரசாணை மூலம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி அளித்தது.
ஆனால், கோயிலை நிர்வகிக்கும் பாரம்பரிய உரிமை உள்ள பொது தீட்சிதர்கள், இந்த அரசாணை தங்களது மத விவகார நிர்வாக உரிமையைப் பாதிப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். மறுபுறம், கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி வேண்டும் என்று வலியுறுத்தி சில மனுதாரர்களும் வழக்குகள் தாக்கல் செய்தனர். கோயில் பொதுமக்களுக்குச் சொந்தமான பொது வழிபாட்டு இடம் என்பதால், அனைவருக்கும் சமமான தரிசன வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
இந்த வழக்கில் அக்டோபர் 30, 2026 அன்று பிறப்பித்த தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம், கனகசபை தரிசனத்துக்கு அனுமதி அளித்த 2022-ஆம் ஆண்டு அரசாணையை உறுதி செய்தது. அரசாணை தீட்சிதர்களின் சடங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதில்லை; அது பொது தரிசன முறையை மட்டுமே ஒழுங்குபடுத்துவதாகவும் கூறியது.
அதே தீர்ப்பில், கோயில் நிர்வாகத்தில் கணக்கு முறைகேடுகள், அனுமதியில்லாத கட்டுமானங்கள், பழைமையான சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களுக்கு சேதம் உள்ளதாக கண்டறிந்து, நிர்வாகத்தைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. குறைபாடுகள் நீங்கும் வரை நிர்வாகத்தை உடனடியாகத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளுமாறு அந்த வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் தலைவராகவும், ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சுரேஷ் குமார் இணைத் தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி. ராஜேந்திரன் உறுப்பினராகவும் இடம்பெறவிருந்தனர். பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் செயலர் ஆகியோர் பதவிவழி உறுப்பினர்களாகச் செயல்படுவதாக இருந்தது.
மேலும், இந்தக் குழுவுக்கு தரிசன முறைகளை முறைப்படுத்துதல், கோயில் நிதி நிர்வாகத்தைக் கண்காணித்தல் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டெடுத்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அன்றாட வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் திருவிழாக்களை நடத்தும் பொறுப்பை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களிடமே விட்டுவிட்டது.
இதைத் தொடர்ந்து, தீட்சிதர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், கனக சபைக்கான அணுகல் குறித்த சர்ச்சையைத் தாண்டி உயர்நீதிமன்றம் சென்று, தீட்சிதர்களின் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்காமல் அவர்களை அங்கிருந்து
அகற்றியுள்ளது என்று வாதிட்டார். கோயில் கட்டமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்றவற்றுக்கு தீட்சிதர்களே பொறுப்பு என்ற கூற்றையும் அவர் மறுத்தார். தீட்சிதர்கள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 12.1.2027-க்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

