ஒடிசாவை நெருங்கும் 'அக்வான்' புயல்! 72,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
அக்வான் புயல் ஒடிசா கரையை நெருங்கும் நிலையில், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதை பற்றி..

'அக்வான்' புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது - Cyclone
அக்வான் புயல் காரணமாக ஒடிசாவில் 72 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அனு கார்க் தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர புயலாக அக்வான் உருவாகியுள்ளது. முன்னதாக, ஆந்திரம் துனி பகுதியில் அக்வான் புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நவ. 20ல் ஒடிசா அருகே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனு கார்க் கூறுகையில்,
இந்த தீவிர புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள, ஆபத்துக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாளை பிற்பகல் கஞ்சாம் மாவட்டத்தின் கோபால்பூர் அருகே புயல் கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களிலிருந்து சுமார் 72,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 7,900 தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 9,100 கர்ப்பிணிப் பெண்களில், பெரும்பாலானோர் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.
மேலும், ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படையின் 60 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் 131 குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர்.
கடற்கரைகள் மற்றும் சிலிகா ஏரியில் சுற்றுலா நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. அணைகளில் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், நாங்கள் இந்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
அக்வான் தீவிர புயல், தற்போது வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபுரத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 440 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்கே 580 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 530 கி.மீ தொலைவிலும், பூரிக்கு தெற்கே 590 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்புப்படி, இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20, 2026 நண்பகலுக்குள், ஆந்திரப் பிரதேசம்-யானம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில், நர்சாபுரம் மற்றும் புரிக்கு இடையே குறிப்பாக கோபால்பூருக்கு சற்று கிழக்கே கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை இருக்கலாம், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்வான் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ஒடிசா அரசு ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை விடுமுறையளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

