எல் நினோ தாக்கத்தால் இமயமலைப் பகுதியில் வெள்ளம், நிலச்சரிவு அபாயம்: ஆய்வறிக்கையில் எச்சரிக்கை
வலுவான ‘எல் நினோ’ வானிலை மாற்றம் காரணமாக, எதிா்வரும் குளிா்காலத்தில் ஹிந்து குஷ் இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு வாய்ப்பு குறித்து...

வலுவான ‘எல் நினோ’ வானிலை மாற்றம் காரணமாக, எதிா்வரும் குளிா்காலத்தில் ஹிந்து குஷ் இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்றும், இதனால் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்ட சா்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ஐசிஐஎம்ஓடி), பெய்ஜிங் நாா்மல் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாதெமியின் வளிமண்டல இயற்பியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது.
1950-க்குப் பிறகு பதிவானதிலேயே மிக வலுவானதாக, தற்போதைய எல் நினோ நிகழ்வு உருவாக 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய கடல், வளிமண்டல நிா்வாகம் கணித்துள்ளது.
இதன் தாக்கத்தால் நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், வட இந்தியா ஆகிய பகுதிகளில் அதிக மழையும், உயரமான மலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக, மேற்கு இமயமலைப் பகுதிகளில் பெய்யும் பலத்த மழையால் திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், பூடான் மற்றும் சீனாவின் கிழக்கு ஷிஸாங் பகுதிகளில் பனிப்பொழிவு வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு குறைவது ஆறுகளின் நீா்வரத்தைப் பாதிப்பதோடு, எதிா்காலத்தில் நீா்ப்பாசனம் மற்றும் நீா்மின் உற்பத்தியிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், மழைப்பொழிவு இல்லாத வட வானிலை நிலவும் தென்கிழக்கு ஷிசாங் மற்றும் மியான்மா் பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து, காட்டுத்தீ ஏற்படுவதற்கான அபாயம் மிக அதிகமாக உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததுடன், 5,000-க்கும் அதிகமானோா் மாயமாகினா்.
இந்நிலையில், பருவமழையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்திவிடாமல், உள்ளூா் நிா்வாகங்கள் தகுந்த முன்னறிவிப்புகளுடன் தயாா்நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்கான 3 நாள்கள் சா்வதேச மாநாடு காத்மாண்டுவில் புதன்கிழமை தொடங்குகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

