திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 4 அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் குறித்து...

SC

உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டி.ஜி. வினய், கோயில் செயல் அலுவலர் ஜி. செல்வி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குரைஞர் வி. ராமசுப்பு என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நவ. 20-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவை இவர்கள் வேண்டுமென்றே மீறியதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பில் கே.கே. ரமேஷ் என்பவரும் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், அறநிலையத் துறை ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Story image

தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நவ. 20-ஆம் தேதி அனுமதி வழங்கியதாகவும், நவ. 24-ஆம் தேதி அது நிறைவேற்றப்படாமல் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், இது உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறிய செயல் என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கார்த்திகேயன் அழகர்சாமி என்ற பக்தர் தாக்கல் செய்துள்ள மனுவில், "பல கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றிய பின்னர், அதை 11 நாள்கள் அணையாமல் வைத்திருப்பது வழக்கம். உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் ஏற்றிய தீபம், தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கிறது. அது ஏற்றப்பட்ட நாளில் இருந்து குறைந்தபட்சம் 48 மணி நேரம் தொடர்ந்து எரியும். இந்நிலையில், தீப மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்தின் சுடரின் மூலம் தூணில் விளக்கேற்ற உத்தரவிட வேண்டும்' என்று கோரியுள்ளார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தீபம் ஏற்றாத மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட சில மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

எனினும் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, "தாமாக அவமதிப்பு வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. ஆனால், முறையான அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை ஆராய்வோம்' என்று கூறியது.

இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரின் நிலை அறிக்கை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையும் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் அடுத்த ஓரிரு நாள்களில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், மலை உச்சியில் ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "தீபத்தூண்' எனப்படும் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.

தர்காவுக்கு சொந்தமான குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மலையின் பிற பகுதிகள் கோயிலுக்கே சொந்தம் என சுதந்திரத்துக்கு முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் (1931 பிரிவி கவுன்சில் தீர்ப்பு உள்பட) அங்கீகரித்திருந்தாலும், மலை உச்சி முழுவதற்கும் தாங்களே உரிமையாளர்கள் என்றும், அந்தத் தூண் வெறும் நில அளவைக் கல் என்றும் கூறி தர்கா நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2025-ஆம் ஆண்டின் இறுதியில் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டபோது, சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி அப்போதைய திமுக அரசு அந்த உத்தரவைச் செயல்படுத்தாததால் இந்த விவகாரம் தீவிரமடைந்தது.

இதையடுத்து, நவ. 24-ஆம் தேதி கார்த்திகை தீப விழாவுக்காக ஒருமுறை மட்டும் கட்டுப்பாடுகளுடன் தூணில் தீபம் ஏற்ற கடந்த நவ.20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதித்தது. எனினும், உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. வழக்கம்போல திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்

Story image

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 பக்க நிலை அறிக்கையில், தீபம் ஏற்றுவது தொடர்பாக அங்கீகரித்த நபர்களின் பட்டியலை கோயில் தேவஸ்தானம் வழங்காததே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து கடந்த வெள்ளிக்கிழமை (நவ.20) பிறப்பித்த உத்தரவில், நவ. 24-ஆம் தேதி தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்த ஆண்டு மட்டும் இடைக்கால அனுமதி வழங்கியது. மேலும், தேவஸ்தானம், தொல்லியல் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து ஏற்பாடுகளைச் செய்து நிகழ்வு முடிவடைந்த மூன்று நாள்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் நவ. 20-ஆம் தேதியிட்ட உத்தரவுக்கு இணங்க தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தூணில் தீபம் ஏற்ற யார் செல்ல வேண்டும், எத்தனை பேர், எந்த நேரம்?, எந்த வழியில் செல்வார்கள்? போன்ற நடைமுறை ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை. நவ.20 முதல் 24-ஆம் தேதி வரை எனக்குள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புக்குள் உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முயற்சித்தேன். இது தொடர்பாக மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை, காவல் ஆணையர் ஆகியோருடன் பாதுகாப்பு, அனுமதிச்சீட்டு, பார்வையாளர் ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை (நவ. 23) ஏற்பாடுகள் தொடர்பான புகைப்படங்களும் காணொலிகளும் பெறப்பட்டு, செவ்வாய்க்கிழமை (நவ.24) தொடர்புடைய இடத்தை நேரில் ஆய்வு செய்தேன். பாதுகாப்பு மற்றும் மீட்புப் படை ஏற்பாடுகள் தயாராக இருந்தன.

ஆனால், கோயிலின் மரபு, பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கோயில் அறங்காவலர் குழு செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீர்மானித்தது. அத்துடன், தூணில் தீபம் ஏற்ற குழுவை நியமிக்கவோ, அது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை வழங்கவோ நினைவூட்டப்பட்டது. எனினும், அந்தப் பட்டியலை கோயில் தேவஸ்தானம் வழங்கவில்லை.

எனவேதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன். தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெற்று தூணில் தீபம் ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நான் மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறேன். மேலும், இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் பின்பற்ற கடமைப்பட்டுள்ளேன் என்று நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் விளக்கம் கோரினார் ஆளுநர்

சென்னை, நவ. 25: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்க அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசிடம் மாநில ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்தைத் தொடர்ந்து ஆளுநர் தனது செயலர் மூலம் தமிழக தலைமைச் செயலரிடம் இந்த விளக்கத்தைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.