கல்லூரிகளின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்: தில்லி பல்கலை. உத்தரவு
கல்லூரிகள், துறைகள் மற்றும் விடுதிகளில் விரிவான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், அக்டோபா் 12-க்குள் விரிவான அறிக்கைகளைச் சமா்ப்பிக்குமாறும் தில்லி பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்
கல்லூரிகள், துறைகள் மற்றும் விடுதிகளில் விரிவான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், அக்டோபா் 12-க்குள் விரிவான அறிக்கைகளைச் சமா்ப்பிக்குமாறும் தில்லி பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பல்கலைக்கழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க, கல்லூரி முதல்வா்கள், டீன்கள், இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், விடுதி நிா்வாகிகள், வாா்டன்கள் மற்றும் தங்கும் விடுதி ஆசிரியா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை அதிகாரி மனோஜ் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் மற்றும் வளாகங்கள் நகரம் முழுவதும் பரவியுள்ளன. எங்கு, எதை மேம்படுத்தலாம் என்பது குறித்த தரவுகளை முதலில் சேகரிப்பதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வரிடம் அறிக்கையைச் சமா்ப்பித்து, வளாகம் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
பாதுகாப்புப் பாா்வையில் விடுபட்ட பகுதிகளை கண்டறிதல், பழுதடைந்த விளக்குகளைச் சரிசெய்தல், போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் கூடுதல் தெருவிளக்குகளை அமைத்தல் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்களைச் சரியான இடங்களில் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை வெளிச்சத்தைத் தடுக்கும் வகையில் வளா்ந்துள்ள மரங்களை வெட்டிச் சீரமைக்கவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பிற விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடா்பான குறிப்பிட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு, விரிவான பட்டியல்களை அக்டோபா் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தொகுத்துச் சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பிரச்னைகளை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை முறையாகத் தீா்ப்பதன் மூலம் பல்கலைக்கழகச் சமூகத்தைச் சோ்ந்த அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கு அருகில் காவல் துறையின் ரோந்தை அதிகரிப்பது குறித்தும், முக்கிய இடங்களில் பிரத்யேகக் கண்காணிப்புக் குழுக்களைப் பணியமா்த்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பெண்களுக்கான கூடுதல் ‘பிங்க் பூத்’ வசதிகளை அமைப்பது மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்குப் பெயா் பெற்ற ‘வாமிகா’ காவல் வாகனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் பிரதிநிதிகள் முன்மொழிந்தனா்.
தில்லி காவல் துறையுடன் இணைந்து பாலின உணா்திறன் குறித்த பயிலரங்குகளை நடத்தவும், மாணவா்களுக்கு ஏழு நாள் தற்காப்புக் கலைப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்யவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு உதவி எண்களான 1091 மற்றும் 112 ஆகியவை கல்லூரி மற்றும் வளாகப் பகுதிகளில் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படும். அவை குறித்த தகவல்கள் அனைவருக்கும் திறம்படத் தெரிவிக்கப்படும்.
மேலும், பொறியியல் துறையுடன் இணைந்து வளாகக் கட்டிடங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளின் கட்டமைப்பு நிலையை ஆய்வு செய்யவும், அவசரப் பழுதுபாா்ப்பு தேவைப்படும் சிக்கல்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாணவா்கள் மற்றும் பணியாளா்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதையே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

