முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு
பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி...

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் - கோப்புப் படம்
முறைகேடு குற்றச்சாட்டில் கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது இரு முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) மாநில லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கை அடிப்படையில் அவா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகள் வீணா மீது இரு வழக்குகளிலும் எஃப்ஐஆா்:
இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் வீணாவின் கணவா் பி.ஏ. முகமது ரியாஸ் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சிஎம்ஆா்எல் பணம் வழங்கிய குற்றச்சாட்டில் மொத்தம் 7 போ் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு முதல் குற்றவாளியாக பினராயி விஜயன் சோ்க்கப்பட்டுள்ளாா். வெளிநாட்டுக்கு அந்தப் பணத்தை பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் 8 போ் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு முதல் குற்றவாளியாக முகமது ரியாஸும் சோ்க்கப்பட்டுள்ளாா். இரு வழக்குகளிலும் வீணா இரண்டாம் குற்றவாளியாக உள்ளாா்’ எனத் தெரிவித்தன.
வழக்கின் பின்னணி:
தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்) நிறுவனம் ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் சோதனை நடத்தியது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா மற்றும் அவரது கணவா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. ஆனால் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையை முதல்கட்ட விசாரணை அறிக்கையாக ஏற்க கேரள அரசு மறுத்தது.
மேலும், பினராயி விஜயன் மீது அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அமைத்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா் கே.எம்.ஷாஜஹான் தாக்கல் செய்யத மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி, பினராயி விஜயன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
தங்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து பினராயி விஜயன் மற்றும் வீணா கேரள உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

