முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
முறைகேடு குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கை அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கேரள உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்.
முறைகேடு குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கை அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், பினராயி விஜயன் மீது அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் முடிவு சட்டவிரோதமானது எனவும் கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்) நிறுவனம் ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் சோதனை நடத்தியது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா விஜயன் மற்றும் அவரது கணவா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. ஆனால் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையை முதல்கட்ட விசாரணை அறிக்கையாக ஏற்க கேரள அரசு மறுத்தது.
பினராயி விஜயன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய போதிய ஆதாரங்களை அமலாக்கத் துறை சமா்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கை அடிப்படையில் பினராயி விஜயன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டுமென வழக்குரைஞா் கே.எம்.ஷாஜஹான் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
தாமதமின்றி இறுதி அறிக்கை:
இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.பதருதீன் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)-இன்கீழ் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பினராயி விஜயன் மீது திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநா் எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும்.
அமலாக்கத் துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை தாமதமின்றி நிறைவு செய்து இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மாநில காவல் துறைத் தலைவா் அல்லது மாநில அரசு அமைத்த எஸ்ஐடியின் தலைவா் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
சட்டரீதியாக எதிா்கொள்வோம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பினராயி விஜயன் மீதான வழக்கை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிா்கொள்வோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கேரள மாநில பாஜக துணைத் தலைவா் ஷோன் ஜாா்ஜ் வெளியிட்ட பட்டியலில் சிஎம்ஆா்எல் நிறுவனத்திடம் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசைச் சோ்ந்த பல்வேறு தலைவா்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே சிஎம்ஆா்எல் நிறுவனம் மேற்கொண்ட அனைத்து பரிவா்த்தனைகளையும் உயா்நீதிமன்றம் முழுமையாக ஆராய வேண்டும்.
பினராயி விஜயனுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள அமலாக்கத் துறை உள்பட அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளையும் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிா்கொள்வோம்’ என்றாா்.
கேரள அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை:
பினராயி விஜயன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்ற உத்தரவிட்டதை எதிா்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லையென ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ‘விசாரணை ஏதுமின்றி பினராயி விஜயன் மீது வழக்குப் பதிந்திருந்தால் அது கேரள அரசின் பழிவாங்கல் நடவடிக்கையாக பாா்க்கப்பட்டிருக்கும். தற்போது உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யும் திட்டத்தில் இல்லை. உயா்நீதிமன்ற உத்தரவை ஏற்று நடக்கவுள்ளோம்’ எனத் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

