செய்யறிவு எதிரொலி: ஸோஹோவில் சம்பள உயர்வு இல்லை! ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு!
ஸோஹோவில் சம்பள உயர்வு இல்லை என்று ஸ்ரீதர் வேம்பு அறிவித்திருப்பது பற்றி...

ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - ENS
ஸோஹோ நிறுவன ஊழியர்களுக்கு இந்தாண்டு ஊதிய உயர்வு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
வணிக மென்பொருள்களை தயாரிக்கும் இந்தியப் பன்னாட்டு நிறுவனமான ஸோஹோவில் கிட்டத்திட்ட 10,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஸோஹோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த பல மாதங்களாக அதிகரிக்கப்படவில்லை என்றும், இந்தாண்டு வழக்கமாக வழங்கப்படும் ஊதிய உயர்வும் கிடையாது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மென்பொருள் துறையின் வணிகக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாக உள்ளது. மேலும், செய்யறிவானது செலவுகளை அதிகரித்துள்ளது. தரவு மையங்களுக்குத் தேவைப்படும் சர்வர்கள் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. செய்யறிவு பயன்பாடு வேகமாக அதிகரித்து, மிக அதிக செலவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனை நாங்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.
இவை அனைத்துக்கும் மேலாக, சவாலான புவிசார் அரசியல் பின்னணியும் உள்ளது.
எங்களின் சந்தைப்படுத்தல் பட்ஜெட்டைக் குறைத்துள்ளோம். இந்தாண்டு எங்களால் வழக்கமான சம்பள உயர்வை வழங்க முடியாது என்று எங்கள் ஊழியர்களிடம் கூறியுள்ளோம். இதைத் தவிர்க்க முடியாததற்கு நான் மன்னிப்புக் கேட்டுள்ளேன்.
பெரும் ஆட்குறைப்புகளைத் தவிர்க்க நாங்கள் கடுமையாக உழைப்போம், ஆனால் மென்பொருள் வேலைகளுக்கான கண்ணோட்டம் இருண்டதாகவே உள்ளது. கடந்த 18 மாதங்களாக நாங்கள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை
எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நாங்கள் எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பணியில் இருக்கிறோம். எங்களின் இந்தப் புதுப்பித்தல் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை அடுத்த 3-5 ஆண்டுகள் தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
AI Echo: No salary hikes at Zoho! Sridhar Vembu announces!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


